மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் மீது வழக்குப்பதிவு செய்த கொல்கத்தா காவல்துறை!
கொல்கத்தா , 23 ஜூன் (ஹி.ச.) கொல்கத்தா மேற்கு வங்க பா.ஜ.க தலைவரும், மத்திய அமைச்சருமான சுகந்தா மஜும்தார் மீது பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய மற்றும் அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக கொல்கத்தா காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளத
மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் மீது வழக்குப்பதிவு செய்த கொல்கத்தா காவல்துறை


கொல்கத்தா , 23 ஜூன் (ஹி.ச.)

கொல்கத்தா மேற்கு வங்க பா.ஜ.க தலைவரும், மத்திய அமைச்சருமான சுகந்தா மஜும்தார் மீது பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய மற்றும் அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக கொல்கத்தா காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

மஜும்தாரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கொல்கத்தாவில் உள்ள பர்டோல்லா காவல் நிலையத்தில் ஒரு பெண் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் புகாரின் அடிப்படையில், நேற்று BNS பிரிவு 79/352 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பொது அமைதியைக் குலைக்கும் நோக்கில், சோனகாச்சி பகுதி (கொல்கத்தாவில் உள்ள சிவப்பு விளக்கு பகுதி) பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கில், சுகந்தா மஜும்தார் இதே போன்ற வார்த்தைகளைப் பேசியதாக அந்தப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை போலீஸ் சுகந்தா மஜும்தாரை தடுத்து நிறுத்திய போது, அவர் சோனாகாச்சியின் பாலியல் தொழிலாளர்கள் அளவுக்கு உங்கள் தரம் குறைந்து விட்டது, என்று கடுமையாக பேசியுள்ளார்.

மத்திய அமைச்சரின் கருத்தை ஆளும் கட்சியான டி.எம்.சி சமூக ஊடகங்களில் வெளியிட்டது. டி.எம்.சி தலைவர்கள் அவரது பேச்சை கடுமையாக விமர்சித்தனர்.

இந்தக் கருத்தை வெளியிட்டதன் மூலம் மஜும்தர் சோனாகாச்சியின் பாலியல் தொழிலாளர்களை அவமதித்ததாகக் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சுகந்தா மஜும்தார்,

பாலியல் தொழிலாளர்களை அவமதிப்பது எனது நோக்கமல்ல. கொல்கத்தா காவல்துறை மற்றும் மேற்கு வங்க காவல்துறையிடம் இல்லாத ஒரு கொள்கை மற்றும் நெறிமுறைகளை பாலியல் தொழிலாளர்களிடம் இருக்கிறது, என்று சொல்ல வந்தேன். முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் இயங்கும் காவல்துறை தரத்தை குறைத்து நம்பகத்தன்மையை இழந்துவிட்டனர். அரசியல் ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாததற்காக என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / J. Sukumar