நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
சென்னை, 24 ஜூன்(ஹி.ச.) சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ''கொகைன்'' போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 38) என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர
நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல்


சென்னை, 24

ஜூன்(ஹி.ச.)

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் 'கொகைன்' போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 38) என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,

அவருக்கு 'கொகைன்' சப்ளை செய்ததாக ஆப்பிரிக்க நாடான கயானாவை சேர்ந்த ஜான் (38) என்பவர் ஓசூரில் கைது செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து ஜான் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர் யாருக்கெல்லாம் போதைப்பொருளை சப்ளை செய்தார்? என்ற பட்டியலை போலீசாரிடம் கொடுத்தார். அந்த பட்டியலில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஸ்ரீகாந்தும் இடம்பெற்றிருந்தார்.

இதையடுத்து போலீசார் நேற்று ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.

போலீசாரின் விசாரணையின்போது, தான் போதைப்பொருளை பயன்படுத்தியதே இல்லை என்று ஸ்ரீகாந்த் வாதம் செய்தார். ஆனால் அவருக்கு அடிக்கடி போதைப்பொருள் சப்ளை செய்ததாக ஜான் குறிப்பிட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை வரவழைத்தது.

இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள ஸ்ரீகாந்தின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

பரிசோதனை முடிவில், ஸ்ரீகாந்த் 'கொகைன்' போதைப்பொருளை பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போதைப்பொருள் பயன்படுத்தி 45 நாட்கள் வரை மருத்துவ பரிசோதனையில் கண்டறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் ஸ்ரீகாந்த் வேறு யாருக்காவது போதைப்பொருளை வழங்கியுள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஸ்ரீகாந்த் ஆன்-லைன் மூலமாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் போதைப்பொருளை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீகாந்தை முதல் வகுப்பு சிறையில் அடைக்க நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி அவர் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Hindusthan Samachar / B. JANAKIRAM