Enter your Email Address to subscribe to our newsletters
லண்டன் , 2 ஜூலை (ஹி.ச.)
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போடியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரை சதம் கடந்து 63 ரன்னில் அவுட்டானார். அமன்ஜோத் கவுர் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 63 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ரிச்சா கோஷ் 32 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார். இங்கிலாந்து சார்பில் லாரன் பெல் 2 விக்கெட்டும், லாரன் பைலர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சில் சிக்கி முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர். அந்த அணியின் டாமி பியூமாண்ட் 35 பந்தில் 54 ரன்கள் குவித்தார். சோபி எக்ளஸ்டோன் 35 ரன்னும், எமி ஜோன்ஸ் 32 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகி விருது அமன்ஜோத் கவுருக்கு அளிக்கப்பட்டது. இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 2 விக்கெட்டும், தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Hindusthan Samachar / J. Sukumar