Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 3 ஜூலை (ஹி.ச.)
ரயில்வே துறையை நவீனப்படுத்த மத்திய அரசு முழுவீச்சில் திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் பொதுமக்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது.
குறிப்பாக ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கானது.
ரயில் டிக்கெட் விலையேற்றத்தை அறிவித்திருக்கும் மத்திய அரசு, ரயில் ஒன் செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் அனைத்தும் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் இந்த செயலி மூலம் பிளாட்பார்ம் டிக்கெட் பெற்றால் மூன்று விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
ரயில் ஒன் செயலி மூலம் ரயில்வே துறையின் அனைத்து சேவைகளையும் பயணிகள் பெற்றுக் கொள்ள முடியும். ரயில் புறப்பாடு, வருகை, ரயில் செல்லும்போது நிகழ்நேர கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ரயில் பயணிகளுக்கு கிடைக்கும்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்,
ரயில்வே தகவல் அமைப்புகள் மையத்தின் 40-வது நிறுவன தினத்தையொட்டி புது தில்லியில் ரயில் ஒன் என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகம் செய்து வைத்தார்.
எளிதில் பயன்படுத்தக் கூடிய இந்த செயலியை ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது அனைத்து பயணிகள் சேவைகளையும் ஒருங்கிணைக்கிறது.
முன்பதிவு செய்யப்படாத மற்றும் நடைமேடை டிக்கெட்டுகள் 3% தள்ளுபடியுடன் பெற்றுக்கொள்வது, ரயில் பயணத்தை கண்காணிக்கும் வசதி, பயணிகளின் குறைகளுக்கு தீர்வு காணும் சேவை உள்ளிட்டவை இந்த செயலியில் இடம்பெற்றுள்ளன.
ரயில் பயணத்தின்போது ஆன்லைனில் உணவு முன்பதிவு செய்யும் வசதி, ரயில் நிலையங்களில் பயணிகளின் பொருட்களை எடுத்துச் செல்லும் தொழிலாளர்களை முன்பதிவு செய்தல், வாடகை கார்களை முன் பதிவு செய்யும் வசதி உள்ளிட்டவையும் இதில் உள்ளன.
ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து வழங்கப்படும். மேலும் இந்த இணையதளத்தால் ரயில் ஒன் செயலியும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது ரயில் கனெக்ட் மற்றும் யுடிஎஸ் செயலிகளின் கடவுச்சொல் அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் உள்நுழையும் வசதியும் இந்த செயலியில் உள்ளது.
Hindusthan Samachar / B. JANAKIRAM