Enter your Email Address to subscribe to our newsletters
பெங்களூரு, 5 ஜூலை (ஹி.ச.)
‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற போது நடிகர் கமலஹாசன் தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என தெரிவித்தார்.
கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட சலுவளி உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கமல்ஹாசன் இந்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் நிர்பந்திக்கப்பட்டார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்து விட, ‘தக் லைஃப்’ திரைப்படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தை ராஜ்கமல் நிறுவனம் அணுகியது. அந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாக பிரசன்னா கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். பின்னரும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை.
இதனை தொடர்ந்து மகேஷ் ரெட்டி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீண்ட விசாரணைக்கு பின்னர், உயர் நீதிமன்றம் அந்த கருத்திற்காக கமல்ஹாசனை மன்னிப்புக் கேட்க ஏன் கோர வேண்டும்? அது நீதிமன்றங்களின் வேலை அல்ல என்று நீதிபதி காட்டமாக கூறினார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது திடீர் திருப்பமாக கன்னட மொழியின் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வரும் ‘கன்னட சாகித்ய பரிஷத்’ என்ற அமைப்பு, பெங்களூரு நகர சிவில் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, எதிர் தரப்பினரின் வாதங்களைக் கேட்காமலேயே பிறப்பிக்கப்பட்ட இந்தத் தடையாணையில், கன்னட மொழியை விடத் தங்கள் மொழி உயர்ந்தது என்றோ அல்லது கன்னட மொழி, இலக்கியம், கலாசாரத்தைப் புண்படுத்தும் வகையில் அல்லது அவதூறு செய்யும் வகையிலேயோ கமல்ஹாசன் எந்தவிதமான அறிக்கைகளையோ, கருத்துக்களையோ வெளியிடவோ, எழுதவோ, பதிவிடவோ கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தடையானது, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையான ஆகஸ்ட் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b