Enter your Email Address to subscribe to our newsletters
திருவனந்தபுரம், 8 ஜூலை(ஹி.ச.)
அரபிக்கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டீஷ் கடற்படையின் எப் 35 பி போர் விமானம், கடந்த மாதம் 14ம் தேதி திருவனந்தபுரம் விமானநிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது.
எரிபொருள் பிரச்னையால் தரை இறங்கிய விமானம், எரிபொருள் நிரப்பிய நிலையில் பழுதாகி நின்று விட்டது. பல நாள் முயன்றும், வெளிநாட்டில் இருந்து பொறியாளர்கள் வந்து முயற்சித்தும் பறக்க வைக்க முடியவில்லை.
இந்த விமானத்தை ஆய்வு செய்வதற்காக, பிரிட்டிஷ் விமானப்படையின் பொறியாளர்கள் 24 பேர் கொண்ட குழு, நேற்று திருவனந்தபுரம் வந்தது.
இதில் பிரிட்டிஷ் விமானப்படையின் ஏர்பஸ் ஏ400எம் அட்லஸ் விமானத்தில் அவர்கள் வந்திறங்கினர்.
இதையடுத்து விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே நிறுத்தப்பட்டிருந்த அந்த விமானம், பழுது பார்க்கும் ஹேங்கருக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு விமானத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.
பிரிட்டன் பாதுகாப்புத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'இந்திய அதிகாரிகளின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளது.
அதிநவீன தொழில்நுட்பங்களும், எதிரியை திணறடிக்கும் திறன்களும் கொண்ட இந்த விமானம், ஹெலிகாப்டர் போலவே செங்குத்தாக தரை இறங்கும் ஆற்றல் கொண்டது.
உலகில், அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி என மூன்று நாட்டு ராணுவத்தினர் மட்டுமே இந்த வகை விமானத்தை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / B. JANAKIRAM