Enter your Email Address to subscribe to our newsletters
மதுரை , 8 ஜூலை (ஹி.ச)
மதுரை மாவட்டத்தில் உள்ள முதலாம் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. ஜூலை 10ல் யாகசாலை பூஜை துவங்குகிறது.
கருவறையில் மலை அடிவார பாறையில் குடைந்து சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளகனிவாய் பெருமாள் ஆகிய ஐந்து மூலவர்கள் சன்னதி உள்ளது. சுவாமி சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, நாரதர், சூரியன், சந்திரன், பிரம்மா, காயத்ரி, சாவித்திரி திருமேனிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கற்பக விநாயகர் சன்னதியில் தாமரையில் அமர்ந்த நிலையில் விநாயகர், கீழ்பகுதியில் மலையை தாங்கி நிற்கும் ஆஞ்சநேயர் திருமேனிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மூலஸ்தானத்தில் கும்பாபிஷேகத்திற்காக கல்கம் திருப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் ஏப்.9ல் பாலாலயம் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா-பாலாஜி சொந்த செலவில் மூலஸ்தானத்தில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து மூலவர் திருமேனிகளிலும் 50 வகையான மூலிகை மருந்துகளால் ஆன கல்கம் மருந்து சாத்துப்படி செய்யும் பணிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தன. மூலஸ்தானத்தில் சத்நிகிரீஸ்வரர், தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள கோவர்த்தனாம்பிக்கை அம்பாளுக்கு சிவாச்சாரியார் ரமேஷ் தலைமையில் நேற்று அஷ்டபந்தனை மருந்து சாத்துப்படி செய்யப்பட்டது.
அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம், சண்முகசுந்தரம், துணை கமிஷனர் சூரிய நாராயணன் அஷ்டபந்தன மருந்து சாத்துப்படி செய்தனர்.
Hindusthan Samachar / vidya.b