Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 8 ஜூலை (ஹி.ச.)
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது.
இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது.
தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, பான் இந்திய இசை அமைப்பாளராக உயர்ந்திருக்கும் அனிரூத் - ரசிகர்களின் விருப்பத்திற்காக வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு மேடை இசை நிகழ்ச்சியை ரசிகர்களின் பங்களிப்புடன் நேரலையாக நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
சர்வதேச அளவிலான இவரது இசைப் பயணம் ரசிகர்களிடத்தில் பிரபலமாக இருக்கும் தருணத்தில் எதிர்வரும் 26 ஆம் தேதி அன்று கிழக்கு கடற்கரை சாலையில் அமையப்பெற்றிருக்கும் திருவிடந்தை எனும் இடத்தில் #Hukum எனும் பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்லாயிர கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது.
தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையானது.
இந்திய அளவிலான இசையமைப்பாளர்கள் தலைமை ஏற்று நடத்தும் இசை நிகழ்ச்சி ஒன்றின் டிக்கெட் இவ்வளவு குறைவான நேரத்தில், அதிவேகமாக விற்பனையாகி புதிய சாதனை படைத்திருப்பது இதுதான் முதன்முறை என திரையிசை ரசிகர்கள் அனிருத்தை கொண்டாடுகிறார்கள்.
இதனிடையே டிக்கெட்டுகள் விற்பனை நேரலையில் வெளியானவுடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பதிவு செய்ய விரைந்தனர்.
சில நிமிடங்களிலேயே மிகப்பெரிய வரிசை காணப்பட்டது.
இதில் பல ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை.
மேலும் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள்.கூடுதல் டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என சமூக வலைதளங்கள் மூலமாக தங்களின் விருப்பத்தை பதிவிட்டனர்.
இதன் மூலம் சென்னைவாசிகள் அனிருத் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதும், அவருடைய இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு உற்சாகமாக இருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / Durai.J