Enter your Email Address to subscribe to our newsletters
சிட்னி , 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி, தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் ஒரு அணிகளும் தலா ஒரு வெற்றியின் சமநிலையில் இருக்க, மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 172 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய டிவால்ட் பிரெவிஸ் 26 பந்துகளில், 6 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 53 ரன்கள் அடித்தார்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கிளென் மேக்ஸ்வெல் பொறுப்புடன் ஆடி 36 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 62 ரன்களை அடித்தார்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் 6 சிக்சர்களை அடித்ததன் மூலமாக விராட் கோலியின் சாதனையை டிவால்ட் பிரெவிஸ் முறியடித்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற பெருமையை டிவால்ட் பிரெவிஸ் பெற்றுள்ளார்.
விராட் கோலி 10 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 12 சிக்சர்களை அடித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை டிவால்ட் பிரெவிஸ் வெறும் 3 போட்டிகளில் 14 சிக்சர்களை அடித்து முறியடித்துள்ளார்.
மேலும், இந்த டி20 தொடரில் 3 போட்டிகளில் ஆடிய டிவால்ட் பிரெவிஸ் 14 சிக்சர், 13 பவுண்டரி உள்பட 180 ரன்களை குவித்துள்ளார்.
Hindusthan Samachar / J. Sukumar