Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, போலீஸ் எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்படும்போது காவல் துறையில் ஏற்கனவே இரண்டாம் நிலை, முதல் நிலை மற்றும் தலைமை காவலர்களாக பணிபுரிவோருக்கு, 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இவர்களுக்கும், மற்ற விண்ணப்பத்தாரர்களான பொதுப் பிரிவினருக்கும், வெவ்வேறு நாளில் எழுத்து தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
மேலும், பணிமூப்புக்கான பட்டியல் தயாரிக்கும்போது, இந்த, 20 சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்த கொள்கை முடிவால், எஸ்.ஐ., தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற ரஞ்சித் சிங் என்பவர் பணிமூப்பு பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டார்.
இதை எதிர்த்து, ரஞ்சித்சிங், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.ஐ., தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணிமூப்பு பட்டியல் தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, இனி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, தாலுகா மற்றும் ஆயுதப்படைக்கு எஸ்.ஐ., பதவிக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, காவல் துறை ஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவினருக்கு ஒரே நாளில் எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்படும் என, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b