Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 6 ஆகஸ்ட் (ஹி.ச.)
பெண்களுக்கான அதிகாரமளிப்பைக் குறிக்கோளாகக் கொண்டு ஜி-டெக் கம்ப்யூட்டர் கல்வி நிறுவனம் ஜி-டெக் பெண்கள் சக்தி திட்டத்தின் மூன்றாவது கட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் 1002 பெண்களுக்கு இலவசத் திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்காக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஜி-டெக் மையங்களில் இருந்து 35 வயது வரையிலான பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிந்த ஆறு மாதங்களுக்குள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளில் 2023-ல் 1000 பெண்களும், 2024-ல் 1001 பெண்களும் இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜி டெக் பெண்கள் சக்தி திட்டம் - 3’-ன் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில், பிரபல திரைப்பட நடிகை தேவயானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்ததோடு, பெண்கள் நிலை மாற வேண்டும் என்றால், அவர்களின் கல்வி திறன் உயர வேண்டும், என்று கூறினார்.
மேலும், நாட்டில் வரதட்சணை கொடுமையால் பெண்கள் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது என்றவர், இத்தகைய நிலை மாற வேண்டும், பெண்கள் தனித்து நிற்க வேண்டும் என்றால், நிச்சயம் அவர்கள் படிக்க வேண்டும். படிப்பு தான் பெண்களை உயர்த்தும், கல்வி இருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது, என்றும் கூறினார்.
இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் 35 வயது வரையிலான பெண்கள் ஜி-டெக் மையங்களில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டம் ஜி-டெக்-ன் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படுவதாகவும், தொடர்ச்சியான முன் முயற்சியாகத் தொடரும் எனவும் ஜி-டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / J. Sukumar