Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 6 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்தியா, பிலிப்பைன்ஸ் இடையேயான தூதரக உறவு 75 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் 5 நாள் அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகைக்கு வந்த அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி இருவரும் அதிபர் மார்கோசை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி-அதிபர் மார்கோஸ் தலைமையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்தும், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் நின்றதற்காகவும் அதிபர் மார்கோசுக்கு பிரதமர் மோடி நன்றி கூறினார்.
மேலும், இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாத வருகை சலுகையை பிலிப்பைன்ஸ் சமீபத்தில் வழங்கிய நிலையில், பிலிப்பைன்ஸ் சுற்றுலா பயணிகளுக்கும் இந்தியாவில் விசா இல்லா வருகை சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டது.
மேலும், டெல்லி-மணிலா இடையே நேரடி விமான சேவையை தொடங்கவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
இரு நாட்டு தலைவர்கள் இடையேயான சந்திப்பில், இருதரப்பு உறவை மூலோபாய கூட்டாண்மை கட்டத்திற்கு உயர்த்துதல், இரு நாடுகளின் விமானப்படைகள் மற்றும் கடற்படைகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான விதிகளை வரையறுத்தல் மற்றும் விண்வெளியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கான ஒத்துழைப்பு உள்ளிட்ட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் மகாசாகர் தொலைநோக்குப் பார்வையில் பிலிப்பைன்ஸ் முக்கிய பங்காளி.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, செழிப்பு மற்றும் விதிகள் சார்ந்த ஒழுங்குக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். சர்வதேச சட்டங்களின்படி கடல் வழி கண்காணிப்பை நாங்கள் ஆதரிக்கிறோம். எங்கள் இருதரப்பு உறவை மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு உயர்த்த முடிவு செய்துள்ளோம்.
இதற்கான விரிவான செயல் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்பட்ட பாதுகாப்பு உறவுகள் ஆழமான பரஸ்பர நம்பிக்கையின் அடையாளமாகும்’’ என்றார்.
தூதரக உறவின் 75ம் ஆண்டின் நிறைவை கொண்டாடும் வகையில் இரு தலைவர்களும் சிறப்பு தபால் தலையை வெளியிட்டனர்.
இதையடுத்து, டெல்லி-மணிலா இடையேயான நேரடி விமானப் போக்குவரத்து வரும் அக்டோபரில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
Hindusthan Samachar / JANAKIRAM