Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 6 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக தூய்மைப்பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசு இந்தப் போராட்டத்திற்கு உடனடியாக செவி சாய்த்திட வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக செவிசாய்த்திட வேண்டும்.
நாம் தமிழர் கட்சி சார்பாக என் தலைமையில் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கும் நிலையில், தூய்மைப் பணியாளர்களின் இவ்வறவழிப் போராட்டத்தின் கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அடிப்படைப் பணி நிரந்தரம் கோரியும் தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் தொடர்ச்சியாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பேரிடர் காலங்கள் முதல் பண்டிகை நாட்கள் வரையில் பொதுச்சமூகம் ஏற்படுத்தக்கூடிய குப்பைக்கழிவுகளை அகற்றி, பொது சுகாதார ஒழுங்கில் பெரும் பங்காற்றிடும் தூய்மைப் பணியாளர்கள் இதுநாள் வரையில் கையுறைகள், முகமூடிகள், ஓய்வறைகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தற்காலிகப் பணியாளர்களாகவே பணியாற்றி வந்துள்ளனர். 15-20 ஆண்டுகாலம் பணியாற்றிய ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யும் சென்னை மாநகராட்சியின் கொடுங்கோன்மை போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டத்திற்கு மாறானது என்ற அடிப்படை கூடத் தெரியாமல் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவது பேரவலமாகும். பணியாளர்களின் உரிமையை நேரடியாக ஒருபுறம் மறுத்தும், மற்றொருபுறம் சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் குப்பை மேலாண்மையைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்த நிலையிலும் தமிழ்நாடு அரசின் செயல்திறனற்ற ஆட்சிமுறை வெட்டவெளிச்சமாகியுள்ளது.
இதனால், ஆதிக்குடிகள் உள்ளிட்ட பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த 2000 பேர் வேலை இழப்பு மற்றும் குறைந்த ஊதியம் ஆகியவற்றை எதிர்கொள்ளவிருக்கிறார்கள்.
2021ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தனியார்மயமாக்கலை எதிர்த்துக் கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தற்போது தூய்மைப் பணியாளர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். சமூகநீதி அரசு என்று போலிப் பிம்பத்தினை உருவாக்கிடத் துடிக்கும் ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு ஏழை எளிய, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து அநீதி இழைத்து வருகின்றது. இனியாவது தமிழ்நாடு அரசு தன்னுடைய நாடகங்களை நிறுத்திவிட்டு உண்மையில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு செவிமடுத்துத் தனியார்மயமாக்கலை தடுத்திடவும், அவர்களைப் பணி நிரந்தரம் செய்திடவும், அவர்களுக்கு இதர அரசுப்பணிக்கான ஊதியப் பயன்களை உரிய முறையில் வழங்கிடவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ