Enter your Email Address to subscribe to our newsletters
துபாய் , 14 செப்டம்பர் (ஹி.ச.)
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
தொடரின் 6 வது லீக் போட்டி இன்று நடக்கிறது. இதில், இந்தியா - பாகிஸ்தான் மோதுகிறது. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது.
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல், அதைத்தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி காரணமாக இரு நாட்டு உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது.
அதன் பிறகு இரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இந்த சம்பவத்திற்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி என்பதால் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், இந்த போட்டிக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. எதிர்ப்புகளுக்கு மத்தியில் போட்டி நடப்பதாலும், இப்போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
Hindusthan Samachar / J. Sukumar