Enter your Email Address to subscribe to our newsletters
துபாய் , 15 செப்டம்பர் (ஹி.ச.)
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 6 வது லீக் போட்டி நேற்று இரவு துபாயில் நடைபெற்றது. இதில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்த போட்டிக்கு இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெரும் எதிர்ப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் இடையே நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்தது. பர்ஹான் 40 ரன்னும், ஷாஹின் அப்ரிடி 33 ரன்னும் எடுத்தனர். இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி, 13 பந்தில் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா 31 ரன்னில் வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
வெற்றிக்கு பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஊடகங்களிடம் பேசுகையில், ”இது ஓர் அற்புதமான உணர்வு. இந்தியாவிற்கு நான் கொடுக்கும் சரியான பிறந்தநாள் பரிசு இது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். இந்த வெற்றியை, எல்லையில் வீரத்தைக் காட்டிய நமது ராணுவப் படைகள் அனைவருக்கும் நான் சமர்ப்பிக்க விரும்புகிறேன். அவர்கள் தொடர்ந்து எங்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும். என்றார்.
Hindusthan Samachar / J. Sukumar