நடப்பாண்டில் தமிழகத்துக்கு கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு - தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல்
புதுடெல்லி, 17 செப்டம்பர் (ஹி.ச.) எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான 2025-26ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 21ம் தேதி தொடங்கி ஆக.22ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளம் மூலம் இந்த கலந
நடப்பாண்டில் தமிழகத்துக்கு கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு - தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல்


புதுடெல்லி, 17 செப்டம்பர் (ஹி.ச.)

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான 2025-26ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 21ம் தேதி தொடங்கி ஆக.22ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளம் மூலம் இந்த கலந்தாய்வு நடைபெற்றது.

மீதமுள்ள காலி இடங்கள், முதல் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்றும் கல்லூரிகளில் சேராதவர்களால் ஏற்பட்டுள்ள காலி இடங்களை நிரப்பும் 2ம் சுற்று கலந்தாய்வு செப்.4ம் தேதி தொடங்கியது.செப்.19ம் தேதியுடன் இந்த கலந்தாய்வு முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் கூடுதல் இடங்கள் சேர்க்க இருப்பதோடு, என்ஆர்ஐ ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டிய காரணத்தால் 2ம் கட்ட கலந்தாய்வு செப்.25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் கூடுதல் மருத்துவ இடங்கள் அனுமதிக்கான கல்லூரிகள் பட்டியலை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் அதன் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், மொத்தம் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் என 350 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துடன் சேர்த்து, இதன் மூலம் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 6850 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஒட்டு மொத்தமாக மருத்துவப் படிப்புகளுக்கான எண்ணிக்கை 1,23,700 ஆக உயர்ந்துள்ளது.

உரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் 1056 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 500 இடங்கள் அளிக்க விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளிக்கவில்லை.

எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கல்லூரிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன என்ற விவரங்கள் nmc.org.in என்ற இணையதளத்தில் சென்று பார்வையிடலாம்.

Hindusthan Samachar / JANAKI RAM