Enter your Email Address to subscribe to our newsletters
விருதுநகர் , 17 செப்டம்பர் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை வெம்பக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிசாலையில் இன்று(செப் 17) 30க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், மதிய உணவு வேலை முடிந்த பின்னர் பட்டாசு தொழிற்சாலையில் உள்ள ரசாயன மூலப்பொருட்கள் கலக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் இரண்டு அறைகள் தரைமட்டமாகின.
தகவலறிந்து வந்த வெம்பக்கோட்டை ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய வெடி விபத்தில் கண்டிகா புரம் முகாமை சேர்ந்த கவுரி(50) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மழையிலும் மீட்புப்பணி நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b