Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 10 ஜனவரி (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, புவியை கண்காணிக்கும், இ.ஓ.எஸ்., - என் உட்பட, 18 செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி., - சி62 ராக்கெட், ஜனவரி 12ம் தேதி காலை 10:17 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
இதில், சென்னையைச் சேர்ந்த விண்வெளி துறை, 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான, 'ஆர்பிட்எய்டு ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் 'ஆயுள்சாட்' செயற்கைக்கோளும் ஒன்று. இந்நிறுவனம், புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோளுக்கு மீண்டும் எரிபொருள் நிரப்பும் தீர்வுகளுடன், விண்வெளியில் எரிபொருள் நிலையங்கள் அமைப்பதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 10) திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் வழிபாடு நடத்தினார். இவருடன் சக இஸ்ரோ விஞ்ஞானி குழுவினர் உடன் வந்து இருந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் நாராயணன் கூறுகையில், பிஎஸ்எல்வி-சி62 / இஓஎஸ்-என்1 திட்டம், 2026ம் ஆண்டில் இஸ்ரோவின் முதல் ஏவுதல் மற்றும் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 64-வது ஏவுதல் ஆகும். இந்த ராக்கெட் மூலம் எட்டு வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன.
இதுவரை, இஸ்ரோ 442 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்தத் திட்டம் புவி கண்காணிப்பு பணிக்கு பேருதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b