Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 ஜனவரி (ஹி.ச.)
இந்தியா ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனா முக்கிய இடத்தைப் பிடித்து வருவது மத்திய வர்த்தக அமைச்சக தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
அந்தத் தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து சீனாவுக்கான ஏற்றுமதி கடந்த 2022-23-ஆம் நிதியாண்டு ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் 10.28 பில்லியன் டாலராக இருந்தது.
இது 2024-25-ஆம் நிதியாண்டில் 9.2 பில்லியன் டாலராக சரிந்த நிலையில், நிகழாண்டு ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் 33 சதவீதம் அதிகரித்து 12.22 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் சீனாவுக்கு இந்த அளவு ஏற்றுமதி அதிகரித்துள்ளது இதுவே முதல் முறை.
எண்ணெய் உணவுகள், கடல்சார் பொருள்கள், தொலைத்தொடர்பு கருவிகள், மசாலா பொருள்களின் ஏற்றுமதியே இந்த அதிகரிப்புக்குக் காரணம்.
இந்தியா-சீனா இருதரப்பு வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றத்தை இந்தத் தரவுகள் எடுத்துரைக்கின்றன.
இந்திய ஏற்றுமதி குறித்து தொழில் துறையைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர் கூறுகையில்,
‘அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களுக்கு அந்நாட்டு அரசு அதிக வரி விதித்துள்ளது. இது அந்நாட்டுக்குப் போட்டி விலையில் பொருள்களை ஏற்றுமதி செய்வதை இந்தியாவுக்கு சிக்கலாக்கியுள்ளது.
எனவே, பொருள்களை ஏற்றுமதி செய்ய பல்வேறு நாடுகளின் சந்தைகளில் உள்ள வாய்ப்புகளை இந்திய தொழில் துறை ஆராய்ந்து வருகிறது.’
என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM