Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 ஜனவரி (ஹி.ச.)
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில், விவேகானந்தரின் பிறந்த நாளான, ஜனவரி 12ம் தேதி, தேசிய இளையோர் தினமாக கொண்டாடப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, 'வளர்ந்த இந்தியா எனும் பொருளில், விக்சித் பாரத்' என்ற தலைப்பில், டில்லி, பாரத் மண்டபத்தில், 29வது தேசிய இளையோர் திருவிழா நடைபெற உள்ளது.
ஜனவரி 9 முதல் 12 வரை நடைபெறும் 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய இளையோர் திருவிழாவின் முன்னோட்ட நிகழ்வுகளில் நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் தேசிய நிலைக்குத் தகுதி பெற்ற பங்கேற்பாளர்கள், நாடு தழுவிய டிஜிட்டல் வினாடி வினா, கட்டுரைப் போட்டி மற்றும் மாநில அளவிலான தொலைநோக்கு விளக்கக்காட்சிகள் ஆகிய மூன்று கட்ட செயல்முறைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, நாடு முழுவதிலுமிருந்து வரும் சுமார் 3,000 இளம் தலைவர்களுடனும், இந்திய வம்சாவளி இளைஞர் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள், பத்து கருப்பொருள் பிரிவுகளில் பிரதமரின் முன் தங்கள் இறுதி விளக்கக்காட்சிகளை வழங்குவார்கள். இதன் மூலம், முன்னுரிமை தேசியப் பிரச்சினைகள் குறித்த இளைஞர்களின் கண்ணோட்டங்களையும், செயல்படுத்தக்கூடிய யோசனைகளையும் அவர்கள் முன்வைக்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் போது,
இந்தியாவின் வளர்ச்சிப் பாதை மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் இலக்குகள் குறித்து இளம் பங்கேற்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பை பிரதமர் வெளியிடுவார். இந்த விழாவில் தமிழக இளைஞர்களும் பங்கேற்கின்றனர்.
இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி இன்று
(ஜனவரி 10)வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
உற்சாகமும் ஆர்வமும் நிறைந்த நமது இளைஞர் சக்தி வலிமையானது.
வளமான தேசத்தை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது. இளைஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நாடு முழுவதிலும் உள்ள எனது இளைஞர்களுடன் உரையாடுவதற்கு நான் மிகுந்த ஆவலுடன் உள்ளேன்.
ஜனவரி 12ம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b