Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜனவரி (ஹி.ச.)
இனிமேல் உங்கள் வாட்ஸ்அப் அல்லது இமெயில் முகவரிக்கு நீதிமன்ற சம்மன் வந்தால், அதை சாதாரணமாக நினைத்து ஒதுக்கிவிட முடியாது.
காசோலை மோசடி வழக்குகளில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் கொண்டு வந்துள்ளது. சாதாரணமாக நீதிமன்ற சம்மன் என்றால், தபால்காரர் மூலமாகவோ அல்லது காவல்துறை மூலமாகவோ நேரில் வந்து கொடுப்பதுதான் வழக்கம்.
ஆனால், பெருகி வரும் வழக்குகளை விரைந்து முடிக்கவும், குற்றவாளிகள் சம்மனைப் பெறாமல் தட்டிக்கழிப்பதைத் தவிர்க்கவும் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் யோகேஷ் குமார் குப்தா புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மின்னணு நடைமுறை விதிகள் 2025ன் கீழ், இனி காசோலை மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இமெயில், செல்போன் அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் போன்ற மெசேஜிங் செயலிகள் மூலமாகவே சம்மன் அனுப்பப்படும்.
இது சட்டப்பூர்வமானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான செக் பவுன்ஸ் வழக்குகள் தேங்கிக் கிடப்பதால், அவற்றை விரைந்து முடிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புகார் அளிப்பவருக்கு புதிய நிபந்தனைகள்:
இனி ஒருவர் மீது செக் பவுன்ஸ் புகார் அளிப்பவர், குற்றம் சாட்டப்பட்ட நபரின் இமெயில் முகவரி மற்றும் வாட்ஸ்அப் எண்ணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அந்த தகவல்கள் அனைத்தும் உண்மையானவை தான் என்பதற்கான உறுதிமொழிப் பத்திரத்தையும் அவர் தாக்கல் செய்ய வேண்டும்.
ஒருவேளை தவறான தகவல்களை வழங்கி நீதிமன்றத்தை திசை திருப்ப முயன்றால், புகார் அளித்தவர் மீதே கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாகவே பணத்தைச் செலுத்தி தப்பிக்கலாம்.
இந்தத் திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு வரும் ஆன்லைன் சம்மனிலேயே 'ஆன்லைன் பேமெண்ட் லிங்க்' கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் தவறு செய்ததை உணர்ந்தால், அந்த லிங்க்கை கிளிக் செய்து, உங்கள் வழக்கைச் சரிபார்த்து, காசோலைக்கான பணத்தைச் செலுத்திவிடலாம்.
இப்படி ஆன்லைன் மூலம் பணம் செலுத்தப்பட்டால், அந்த வழக்கை நீதிமன்றம் அங்கேயே முடித்து வைக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் நீதிமன்றத்திற்கு அலைய வேண்டிய அவசியம் இருக்காது.
நீதிமன்ற நடைமுறையில் எளிமை :
இதற்காக நீதிமன்றத்தின் சாப்ட்வேரில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவுடன், நீதிமன்ற ஊழியர்கள் அதனை கணினியில் பதிவேற்றம் செய்வார்கள்.
காலக்கெடு போன்ற தொழில்நுட்ப விபரங்களை மென்பொருளே தானாகவே கணக்கிடும். இதன் மூலம் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்பட்டு, வழக்குகள் மின்னல் வேகத்தில் கையாளப்படும்.
எனவே, இனி உங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு நீதிமன்றத்தில் இருந்து ஏதேனும் மெசேஜ் வந்தால், அது உண்மையான சம்மனா என்று வழக்கறிஞரிடம் ஆலோசித்து விட்டு உடனடியாக செயல்படுவது நல்லது.
அலட்சியம் காட்டினால், அது சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Hindusthan Samachar / JANAKI RAM