Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 10 ஜனவரி (ஹி.ச.)
தூத்துக்குடி முத்தையாபுரம் எம்டிஏ காலனியில், தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் ரூ. 84.50 இலட்சம் மதிப்பீட்டில் பெண்களுக்கென பிரத்யேக மகளிர் பூங்கா என்னும் பிங்க் பூங்காவை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி இன்று திறந்து வைத்தார்.
பூங்காவில் யோகா பயிற்சிக் கூடம், ஸும்பா, இறகுப் பந்து மைதானம், குளிர்சாதன வசதியுள்ள உடற்பயிற்சிக் கூடம், டென்னிஸ் மைதானம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
விழாவில் கனிமொழி எம்.பி கூறியதாவது,
நாம் திறந்து வைத்துள்ள இந்த பிங்க் பார்க் என்பது முழுமையாக மகளிருக்கான ஒரு பூங்கா. இதைப்பற்றி நான் அதிகமாக விளக்க வேண்டியதில்லை. நாங்கள் வரும்போதே பெண்கள் மிகச் சிறப்பாக யோகா, ஸும்பா செய்து கொண்டும், சிலம்பம் சுற்றிக் கொண்டும் இருந்தனர். இதையெல்லாம் பார்க்கும்போது மனதிற்கு ஒரு பெரிய நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது.
ஏனென்றால், பெண்கள் பிறந்த நாளிலிருந்து தங்களது உடலைப் பற்றி அதிகமாகக் கவலைப்படக் கூடாது, அதைக் குறித்து அக்கறையில்லாதவர்களாக இருக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப நமக்குச் சொல்லி வளர்க்கப்படுகிறோம். மற்றவர்களுக்கு உடல்நலம் சரியில்லையென்றால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும், கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பெண்களிடம், தங்களது உடல்நலத்தைப் பற்றி அதிகமாக கவனம் செலுத்த வேண்டாம் என்ற மனநிலையே உருவாக்கப்படுகிறது.
வீட்டிலுள்ள அனைவரும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களது உடல்நலத்தைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதே பெரும்பாலும் நடக்கிறது. மேலும், மற்றவர்களின் முன்னிலையில் நடப்பதோ, உடற்பயிற்சி செய்வதோ பெண்களுக்கு ஒரு பெரிய மனத் தடையாக இருக்கும். ஆனால் இந்தப் பிங்க் பார்க்கில் பெண்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடுவதையும், யோகா செய்வதையும், சிலம்பம் சுற்றுவதையும் பார்க்கும்போது, அவர்கள் அந்த மனத் தடைகளை தாண்டி வரத் தொடங்கியுள்ளார்கள் என்பதே மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
ஒரு ஆண் ஒரு ஊருக்குச் சென்றால் எந்த லாட்ஜிலும் தங்கலாம்; எந்த இடத்திலும், ஒரு பேருந்து நிலையத்தில் கூட இரவு முழுவதும் இருக்க முடியும். ஆனால் ஒரு பெண்ணுக்கு அத்தகைய சுதந்திரம் இல்லை. நாங்கள் தயாராக இருந்தாலும், பாதுகாப்பான இடத்தில்தான் தங்க வேண்டிய நிலை உள்ளது. பாதுகாப்பான இடத்தில் மட்டுமே அமர்ந்து இருக்க வேண்டும்; பாதுகாப்பான போக்குவரத்தையே தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.
இந்தப் பிங்க் பார்க் திறக்கப்பட்ட பிறகு, பெண்கள் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் விடுதலையான உணர்வுடன் உடற்பயிற்சி செய்வதாகவும், தங்களைப் பற்றி கவலைப்படுகிற நண்பர்களை இங்கு உருவாக்கிக் கொள்ள முடிகிறது என்றும் இங்கு ஒரு சகோதரி கூறுகையில் உடற்பயிற்சி முடித்த பிறகு தோழிகளுடன் சிறிது நேரம் பேசிவிட்டு உற்சாகத்துடன் வீட்டுக்குச் செல்கிறோம் என்று கூறினாா். பெண்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வேறு ஊர்களில் வந்து வாழும் நிலையில், மனதில் இருக்கும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு பாதுகாப்பான சூழலை இந்தப் பிங்க் பார்க் உருவாக்கியுள்ளது.
இதுவே மிகுந்த மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒன்றாக உள்ளது. இதைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் மாநகராட்சிக்கும், நமது மேயருக்கும் என் நன்றியும் வாழ்த்துகளும். இன்னும் பல இடங்களில் இதுபோன்ற பிங்க் பார்க்கள் திறக்கப்பட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் மக்கள் பயன்பாட்டிற்காக அதிகமான பூங்காக்கள் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்கள்.
மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகள் குறித்து நாம் கடந்த காலங்களில் அனுபவித்த சிரமங்களை நினைவில் கொண்டு, தற்போது அந்தப் பிரச்சனைகள் பெருமளவில் சரிசெய்யப்பட்டுள்ளன. இது முதலமைச்சாின் ஈடுபாடும், அமைச்சர்கள், மேயர் மற்றும் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாகும் என்று நான் தைரியமாகக் கூற முடியும்.
உப்பளங்களில் வேலை செய்யும் பெண்கள், இயற்கை உபாதைகளுக்காக கழிவறை வசதி இல்லாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதனால் பலர் சிறுநீரக மற்றும் மூத்திரப்பாதை தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்றைக்கு அந்த இடங்களில் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அந்த நிலை பெருமளவில் மாறியுள்ளது.
அதனால், திமுக ஆட்சி என்பது பெண்களுக்காக முக்கியத்துவம் தரக்கூடிய ஆட்சியாக இருந்தாலும், சரிசமமாக அதைவிட அதிக எண்ணிக்கையில் பெண்கள் இருக்கக்கூடிய மாநிலத்திலே அவர்களுக்கான ஒரு ஆட்சியை நான் இங்க நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அது பேருந்து பயணமாக இருக்கட்டும், கல்வியாக இருக்கட்டும், மகளிர் உரிமைத் தொகையாக இருக்கட்டும், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அந்த முக்கியத்துவத்தில் ஒரு பகுதியாகத் தான் திறக்கப்பட்டுள்ளது. உங்கள் வீட்டைப் போலவே இதையும் அன்புடனும், பொறுப்புடனும், பாதுகாப்புடனும் பராமரிப்பீர்கள் என்று நம்புகிறேன். எல்லா தடைகளையும் தாண்டி வரக்கூடிய பெண்களை உருவாக்குவதற்கு இந்த மாதிரி முயற்சிகளும் உங்களுக்கு உதவும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b