Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 11 ஜனவரி (ஹி.ச.)
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி விஜய் பிரசாரக் கூட்டத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இத்துயர சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள், கரூரில் முகாமிட்டு 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், கரூர் தவெக மா.செ. மதியழகன், விஜய் பிரசார பேருந்து ஓட்டுநர் உள்ளிட்டோரை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் 3 நாட்கள் விசாரணை நடத்தினர்.
அப்போது, கரூர் ஆட்சியர் தங்கவேல், கரூர் எஸ்பி ஜோஷ் தங்கையா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் டெல்லி விசாரணைக்கு வரவழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லியில் நாளை விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதனையடுத்து விஜய் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் முன்பு நாளை ஆஜராகிறார்.
இதற்காக தனி விமானத்தில் டெல்லி செல்கிறார். விஜய்யுடன் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் டெல்லி செல்கின்றனர்.
இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய்க்கு டெல்லியில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறையிடம் த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் தங்கும் இடத்தில் உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி, கட்சி இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மனு அளித்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட டெல்லி காவல்துறை, டெல்லியில் விஜய் செல்லும் இடங்களிலும் தங்கும் இடங்களிலும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
விஜய்யை காண அவரது ரசிகர்கள் திரண்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் டெல்லி காவல்துறை செய்து வருகிறது.
Hindusthan Samachar / vidya.b