ஜெர்மனி கல்வி நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
குஜராத், 12 ஜனவரி (ஹி.ச.) ஜெர்மன் பிரதமர் மெர்ஸுடன் இணைந்து இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, இன்று நாம் உருவாக்கியுள்ள உயர் கல்வி குறித்த விரிவான செயல் திட்டம், கல்வித் துறையில் நமது கூட்டாண்மைக்கு ஒரு புதிய திசையை வழங்க
மோடி - மெர்ஸ்


குஜராத், 12 ஜனவரி (ஹி.ச.)

ஜெர்மன் பிரதமர் மெர்ஸுடன் இணைந்து இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி,

இன்று நாம் உருவாக்கியுள்ள உயர் கல்வி குறித்த விரிவான செயல் திட்டம், கல்வித் துறையில் நமது கூட்டாண்மைக்கு ஒரு புதிய திசையை வழங்கும். ஜெர்மனி பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களது வளாகங்களைத் திறக்க நான் அழைக்கிறேன்.

இந்தியக் குடிமக்களுக்கு விசா இல்லாத பயண வசதியை அறிவித்ததற்காக பிரதமர் மெர்ஸுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உக்ரைன் மற்றும் காசா நிலைமை உட்பட உலகளாவிய மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்து நாங்கள் இருவரும் விவாதம் நடத்தினோம். பயங்கரவாதம் மனிதகுலத்துக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது என்ற கருத்தில் இரு நாடுகளும் ஒன்றுபட்டுள்ளன. அதை எதிர்த்துப் போராடுவதில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளன.

உலகளாவிய அனைத்து மோதல்கள் மற்றும் சர்ச்சைகளுக்கும் அமைதியான தீர்வை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் ஒரு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்தியாவும் ஜெர்மனியும் அசைக்க முடியாத உறுதியுடன் இந்த அச்சுறுத்தலை ஒன்றாக எதிர்த்துப் போராடுவதில் உறுதியாக உள்ளன.

இன்று கையெழுத்திடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இந்த அனைத்துத் துறைகளிலும் நமது ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகத்தையும் வலிமையையும் வழங்கும். உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய நிறுவனங்களை சீர்திருத்துவது மிக முக்கியம் என்பதை இந்தியாவும் ஜெர்மனியும் ஒப்புக்கொள்கின்றன.

ஐ.நா. பாதுகாப்பு சபையை சீர்திருத்துவதற்காக ஜி4 குழு மூலம் நாங்கள் மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகள் இந்த பொதுவான நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்.

இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆண்டுதோறும் வலுப்பெற்று வருகிறது. அதன் தாக்கம் இன்று களத்தில் தெளிவாகத் தெரிகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியாவும் ஜெர்மனியும் ஒரே மாதிரியான முன்னுரிமைகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

நமது பாதுகாப்புத் தொழில்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு செயல் திட்டத்திலும் நாங்கள் பணியாற்றுவோம், இது கூட்டு மேம்பாடு மற்றும் கூட்டு உற்பத்திக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று அவர் கூறினார்.

ஜெர்மன் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் தற்போது இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam