Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜனவரி (H.S.)
சென்னை சங்கமம் நம்ம ஊரு திரு விழாவை சென்னை எழும்பூரில் அமைந்துள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பறை இசைத்து விழாவை தொடங்கி வைத்தார்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா' விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம். தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற வடிவங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
இந்நிலையில், சென்னை சங்கமம் கலைவிழாவில் கலந்து கொண்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைவிழாவுடன் பொங்கலை கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
பறை முழங்க, நிலம் அதிர, தொடங்கியது சென்னை சங்கமம் #ChennaiSangamam2026.
நம் மண்ணின் மரபுக் கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் சென்னை சங்கமம் கலைவிழாவுடன் இந்தப் பொங்கலைக் கொண்டாடுவோம்!
உண்மையான அக்கறையோடும் உயர்வான நோக்கோடும் ஒவ்வொரு ஆண்டும் இதனை மேலும் மேலும் சிறப்பாக ஒருங்கிணைத்து வரும் தங்கை கனிமொழிக்கு பாராட்டுகள்!
இந்த ஆண்டு பாடலாசிரியராகவும் களமிறங்கியதற்காக இந்த அண்ணனின் சிறப்பு வாழ்த்துகள்.
I
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
Hindusthan Samachar / Durai.J