Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 17 ஜனவரி (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே முத்துலாபுரத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக வருடா வருடம் தை மாதம் 3ம் தேதி ஸ்ரீ ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இக்கோவிலில் நினைத்த காரியம் நிறைவேற அரிவாள் செய்து காணிக்கை செலுத்துவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.
விழாவிற்கு முன்பே இவ்வூரில் உள்ள, 5 கொல்லர்களிடம், நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள், 2 அடி முதல் 25
அடி வரை அரிவாள் செய்யும்படி கூறுகின்றனர்.
அவர்கள் மார்கழி மாதம் முழுவதும் 30 நாட்கள் விரதமிருந்து அரிவாள் செய்கின்றனர்.
நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள் இன்று காலை கிடா வெட்டி கருப்பணசாமியை வேண்டிக் கொண்டு இன்று மாலை பூசாரிக்கு பட்டு அணிவித்து சாமி பெட்டியை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வருவர்.
நேர்த்திக்கடன் செலுத்தும் சுமார் 2000க்கும் மேற்பட்ட அரிவாள்கள், நள்ளிரவில் ஊர்வலமாக எடுத்துச் செல்வது வழக்கம்.
பல ஆண்டுகளாக அரிவாள் நேர்த்திக்கடன் நடந்து வருவதால், காணிக்கை செலுத்தப்பட்ட அரிவாள்கள் மலை போல் குவிந்துள்ளன. குழந்தை வரம் வேண்டுவோர்கள் அரிவாள்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, திருப்பூர், கோவை, சேலம், ஈரோடு, உடுமலைப்பேட்டை, தேனி, விருதுநகர், மதுரை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த மக்களும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்பட வெளிநாடுகளிலிருந்தும் திரளாக பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
ஆனால் இந்த வருடம் தை 3-ந் தேதி வழக்கம்போல் நடைபெறும் திருவிழாவை பட்டிவீரன்பட்டி காவல் துறையினர் தடை செய்துள்ளனர்.
கிராமத்தில் உள்ள இரு பிரிவினருக் கிடையே ஏற்பட்ட கருத்து மோதலால் திருவிழா தடை செய்யப்பட்டிருப்பது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இன்று பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்தவுள்ள சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரிவாள்கள் தேக்கமடைந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN