Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 17 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோரின் வசதிக்காக, கும்பகோணம் போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் தற்காலிகமாக மாற்றப்பட்ட இடத்திலிருந்து இயக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (கும்பகோணம் கோட்டம்) நிர்வாக இயக்குனர் தசரதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
இயக்கப்படும் நாட்கள்: 18.01.2026 மற்றும் 19.01.2026 (ஞாயிறு மற்றும் திங்கள்).
நேரம்: மாலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை.
புறப்படும் இடம்: கும்பகோணம் நகரப் பேருந்து நிலையம் (Town Bus Stand).
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்வதற்கு 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும் மேற்கண்ட இரண்டு நாட்களில் மட்டும் முன்பதிவு செய்த பேருந்துகள் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். எனவே, பயணிகள் அங்கு சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பேருந்துகளில் ஏறி பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பேருந்துகளில் முன்பதிவு செய்யாமல் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள், எப்போதும் போல வழக்கமான புறநகர் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்படும். பயணிகள் இந்த மாற்றத்தைக் கவனித்து, எவ்வித சிரமமுமின்றி தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு கும்பகோணம் போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN