Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 17 ஜனவரி (ஹி.ச.)
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள சாத்தனஞ்சேரி பகுதியில், பழங்குடியினர் பல தலைமுறையாகச் செய்துவரும் ஒரு வினோதமும் பாரம்பரியமிக்க சடங்கு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
தைப்பொங்கலுக்கு நான்கு நாள்களுக்கு முன்பே, காடுகளிலும் கழனி பகுதிகளிலும் சுற்றித் திரியும் ‘நல்ல பாம்பு’ என்று கருதப்படும் பாம்பைப் பழங்குடியினர் பிடித்து, சில நாள்கள் வீட்டில் வைத்து முன்னோர்கள் சொல்லித் தந்த சடங்குகளையும் வழிபாடுகளையும் செய்து வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக, பிடித்த பாம்பிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து பொட்டு வைத்து வணங்குவது முக்கியமான சடங்காகும். பின்னர் அந்த பாம்பை ஊர் மக்களின் வீடுகளுக்குக் கொண்டு சென்று காட்டுகின்றனர். வீட்டு வாசலில் நின்று “பாம்பு எடுத்து வந்திருக்கோம்” எனக் கூவி அழைப்பார்களாம். பழங்குடியினர் ஒவ்வொருவரும் தீபாராதனை தட்டுடன் வந்து கற்பூரம் ஏற்றி ஆர்த்தி காட்டுகின்றனர்.
அதன்பின் அரிசி அல்லது கையில் உள்ள காசை பழங்குடியினருக்கு நன்கொடையாக வழங்குவது வழக்கம். முடிவில், நல்ல பாம்பை மீண்டும் காடு நோக்கி வழி அனுப்புவது இந்த விழாவின் கடைசிக் கட்டமாகும். இன்றும் தொடரும் இந்த மரபு, பழங்குடியினரின் இயற்கை நம்பிக்கைகள், பாம்புகளுக்கான அச்சமின்றி கொண்ட மரியாதை மற்றும் கிராமிய பண்பாட்டுத் தனிச்சிறப்பை வெளிப்படுத்தும் ஒரு தனித்துவமான பாரம்பரியமாகக் கருதப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN