Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜனவரி (ஹி.ச.)
சென்னையில் இன்று
(ஜனவரி 17) மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
பிரதமர் மோடி வரும் 23ம் தேதி தமிழகம் வர இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடியின் வருகை, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை உறுதி செய்யும். திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கூட்டமாக இந்த பொதுக்கூட்டம் இருக்கும்.
நேற்று நீங்கள் பார்த்திருப்பீர்கள். மும்பையில் மாநகராட்சி தேர்தலில் பாஜ ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று இருக்கிறது. மும்பை மட்டுமல்ல ஒட்டுமொத்த மஹாராஷ்டிராவிலும் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜ ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இருக்கிறது. இந்தியாவின் தெற்கில் எடுத்துக் கொண்டால், முதல்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஒரு மிகப்பெரிய அளவிலான வெற்றியை பாஜ பெற்றிருக்கிறது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எம்ஜிஆர் பிறந்த தினம் இன்று. இந்தப் பிறந்த தினத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் இபிஎஸ் ஐந்து வாக்குறுதிகளை தமிழக வாக்காளர்களுக்கு கொடுத்து இருக்கிறார்.
அதனை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். அதேபோல் இன்றைக்கு நமது மஹாராஷ்டிரா, திருவனந்தபுரத்தின் வெற்றி, தமிழகத்திலும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நாளும், நேரமும் குறிக்கப்பட்டு இருக்கிறது.
பிரதமர் மோடியின் வருகைக்காக நாம் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான வேலைகளை எல்லாம் நாங்கள் தொடங்கி செய்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b