Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜனவரி (ஹி.ச)
தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் சிக்கியுள்ளது.
தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
ஆனால், அதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது.
தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்தது.
இந்த வழக்கு இன்று
(ஜனவரி 20) மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது மண்டல சென்சார் போர்டில் யார் படத்தை பார்த்தார்கள்? படத்தை பார்த்து சட்டப்படி ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது,என நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பி உள்ளது?
அப்போது தணிக்கை வாரியம் தரப்பில் கூறியதாவது:
படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது.
அந்த குழு தான் படத்தை பார்த்துள்ளது.
தணிக்கை வாரிய தலைவர் தான் இறுதி முடிவு எடுப்பார்.
படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்க மும்பையில் உள்ள அதிகாரிகளுக்கே அதிகாரம்.
14-காட்சிகளை நீக்கிய பின் படத்தைப் பார்த்து முடிவெடுக்கப்படும் என கூறினோம்.
14 காட்சிகளை நீக்கிவிட்டதால் தணிக்கைச் சான்று வழங்க கோரினர்.
இறுதி முடிவு எடுப்பதற்கு முன், படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
ஒரு வேளை தனி நீதிபதி இந்த வழக்கை இன்னும் விரிவாக விசாரித்திருந்தால்,வாரியம் நேரடியாகப் படத்தைப் பார்த்ததா அல்லது ஆய்வுக் குழு போன்ற ஒரு அதிகாரம் வழங்கப்பட்ட அமைப்பின் மூலம் பார்த்ததா என்ற சட்ட நுணுக்கம் தெளிவாகியிருக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மும்பை அல்லது டெல்லியில் இருக்கும் வாரிய உறுப்பினர்கள் நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் படங்களையும் பார்ப்பது சாத்தியமில்லை.
அதனால்தான் ஆய்வுக் குழுக்கள் மற்றும் மறுஆய்வுக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்,
இதை தொடர்ந்து வழக்கில் வாதம் நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b