Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜனவரி (ஹி.ச.)
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் அதனை தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் டித்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் தமிழகம் முழுவதும் பரவலான பாதிப்புகள் ஏற்பட்டன.
குறிப்பாக சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்தன. தற்காலிக நடவடிக்கையாக உள்ளாட்சி நிர்வாகங்கள் கல். மண், ஜல்லிகளை கொட்டி சாலைகளை சீரமைத்தன. ஆனால் தற்காலிக சீரமைப்புகள் நீடித்த பயன்பாட்டுக்கு ஏற்றதாக இல்லை. இதனால் மழையால் சேதம் அடைந்த சாலைகளை முன்னுரிமை அடிப்படையில் முழுமையாக சீரமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சிகளிடம் இருந்தும் விரிவான அறிக்கைகள் பெறப்பட்டன. இந்த அறிக்கைகளின் அடிப்படியில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில் சென்னை மாநகராட்சியைத் தவிர்த்து மாநிலத்தில் உள்ள 24 மாநகராட்சிகள் மற்றும் 145 நகராட்சிகளுக்கு மொத்தம் ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு ரூ.100 கோடியும், 479 பேரூராட்சிகளுக்கு ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியின் மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைத்து சாலைகளையும் முழுமையாக சீரமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b