Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 20 ஜனவரி (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில், நாள் ஒன்றுக்கு, 400 டன் குப்பை சேகரமாகிறது. குப்பை சேகரிப்பு பணியில், 1,662 ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மொத்தம், 385 வாகனங்கள் மூலம் குப்பை
சேகரிக்கப் படுகிறது.
இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பை, கன்னடப்பாளையம், பம்மல் விஸ்வேசபுரம், மாடம்பாக்கம் ஆகிய இடங்களில் கொட்டப்படுகிறது.
அங்கு, மலை போல் குப்பை தேங்கி, தொடர்ந்து கொட்ட இடமில்லாத சூழல் நிலவுகிறது. மற்றொரு புறம், துர்நாற்றமும், கொசு தொல்லையும் அதிகரித்து, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
இதையடுத்து தாம்பரம் கன்னடப்பாளையம் கிடங்கில், 8.13 கோடி ரூபாய் செலவில், நவீன குப்பை மாற்று நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
நான்காவது மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளில், நாள்தோறும் 100 டன் குப்பை சேகரமாகிறது. இதில், மக்கும் குப்பை, பசுமை உரக்குடில்களுக்கு செல்கின்றன.
கன்னடப்பாளையத்தில் கொட்டப்பட்ட மற்ற குப்பை, 16,000 டன் தேங்கியுள்ளது.
இங்கிருந்து, நாள்தோறும் 10 லோடு குப்பை, கொளத்துாருக்கு எடுத்து செல்லப்படுகிறது. அப்படியிருந்தும் குறையவில்லை.
தற்போதைய நிலவரப்படி,
6,000 டன் குப்பை உள்ளது. அதுவும் விரைவில் காலியாகிவிடும்.
இனி, நாள்தோறும் சேகரமாகும் குப்பை, 'ஓபன் டம்பிங்' செய்யப்படாது.
லாரிகளில் கொண்டுவரப்படும் குப்பை, புதியதாக கட்டப்பட்டுள்ள மாற்று நிலையத்தில், இரண்டு புனல்களில் கொட்டப்படும். புனல் வழியாக செல்லும் குப்பை, கீழேயுள்ள இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள டேங்கர் போன்ற வடிவமைப்பு கொண்ட தொட்டிக்கு செல்லும்.
'ஹைட்ராலிக்' அமைப்பு குப்பையை அழுத்தி, தொட்டிக்குள் இயந்திரம் செலுத்தும். ஒரு தொட்டி, 15 டன் கொள்ளளவு கொண்டது என்பதால், அது நிரம்பியதும் எச்சரிக்கை வரும். அதன்பின், தொட்டி மூடப்பட்டு, ஹைட்ராலிக் அமைப்பு மூலம் லாரியில் ஏற்றப்பட்டு, கொளத்துாருக்கு எடுத்து செல்லப்படும்.
மொத்தம், 4 லாரிகள், 8 தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. நான்கு தொட்டிகளில் குப்பை நிரப்பி, லாரிகள் எடுத்து செல்லும் போது, மற்ற நான்கு தொட்டிகளில் குப்பை நிரப்பப்படும். இதன்மூலம் அன்றாடம் சேகரமாகும் குப்பை, அன்றே அகற்றப்பட்டு விடும்.
குப்பையை அழுத்தி எடுத்து செல்வதால், சாலைகளில் குப்பை சிந்தவும் வாய்ப்பில்லை. துர்நாற்றமும் தெரியாது.பிளாஸ்டிக் பொருட்கள் தனியாக பிரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படும். விரைவில் இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இதேபோல், மற்ற மண்டலங்களிலும் குப்பை மாற்று நிலையங்கள் கட்டப்படவுள்ளன.
மரக்கழிவுகளை அரைத்து கட்டையாக மாற்றவும், அருள் நகரில் அதற்கான பிளான்ட் அமைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b