Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 21 ஜனவரி (ஹி.ச.)
கடந்த சில ஆண்டுகளாகவே கோவை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிக அளவில் பரவி வருகிறது.
இதனை தடுக்க காவல்துறையினர் 'ஆபரேஷன் கஞ்சா' உள்ளிட்ட பல்வேறு அதிரடி வேட்டைகளை நடத்தி வந்தாலும், போதை ஆசாமிகளின் அட்டகாசம் குறைந்தபாடில்லை என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சியாக அமைந்து உள்ளது.
இந் நிலையில் கோவை கணபதி,பாரதி நகர் பகுதியில் இன்று இரவு சுமார் 10 மணி அளவில், ஒரு வாலிபரைச் சூழ்ந்து கொண்ட ஐந்து பேர் கொண்ட போதை கும்பல், அவரைச் சரமாரியாகக் கைகளால் குத்தியும், கற்களால் தாக்கியும் நிலைகுலைய வைத்தது. .
இந்தக் கொடூரத் தாக்குதலில் அந்த வாலிபர் நிலைகுலைந்து கீழே விழுந்த போது, ஆத்திரம் அடங்காத போதை ஆசாமிகள் பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் ஓங்கிப் போட்டனர்.
இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த வாலிபரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், அந்த 'போதை ஆசாமிகளை' விரட்டி அடித்தனர்.
உடனடியாக சுயநினைவிழந்த வாலிபருக்குத் தண்ணீர் கொடுத்து எழுப்ப முயன்றும் பலனில்லாததால், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் கோவை அரசு மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனை அங்கு இருந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து உள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை கிளப்பி உள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் எந்த அளவிற்குச் சட்டம் - ஒழுங்கைச் சீரழித்து உள்ளது என்பதற்கு மற்றுமொரு சான்றாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / Durai.J