யூடியூப்பில் பணம் சம்பாதிப்பதற்கு தேவையான 7 முக்கிய தகவல்கள்
சென்னை, 21 ஜனவரி (ஹி.ச.) 2026-ல் இளைஞர்கள் பலர் பெருநிறுவனங்களின் பணியை உதறித் தள்ளிவிட்டு சுயமாக தங்கள் தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவ களம் இறங்கியுள்ளனர். ஒவ்வொருவரின் தனித்துவமான திறமைக்கேற்ப சொந்தத் தொழில்களைத் தொடங்குகின்றனர், அதே நேரத்தில் யூட
யூடியூப்பில் பணம் சம்பாதிப்பதற்கு தேவையான 7 முக்கிய தகவல்கள்


சென்னை, 21 ஜனவரி (ஹி.ச.)

2026-ல் இளைஞர்கள் பலர் பெருநிறுவனங்களின் பணியை உதறித் தள்ளிவிட்டு சுயமாக தங்கள் தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவ களம் இறங்கியுள்ளனர்.

ஒவ்வொருவரின் தனித்துவமான திறமைக்கேற்ப சொந்தத் தொழில்களைத் தொடங்குகின்றனர், அதே நேரத்தில் யூடியூப் எனும் டிஜிட்டல் உலகில் தங்கள் அடையாளத்தை பதிக்கவும் ஆரம்பித்துள்ளனர்.

யூடியூபில் வீடியோ பதிவேற்றிய உடனேயே லட்சங்கள் கொட்டுமா என்றால், அது அவ்வளவு எளிதல்ல. அதற்கு சரியான வியூகங்கள் தேவை, யூடியூபின் புதிய விதிமுறைகளை நன்கு அறிந்து அதன்படி செயல்படுவது அவசியம். ஆக, யூடியூப் வாயிலாக எப்படி வருமானம் ஈட்டுவது, 2025-2026ல் வந்துள்ள புது மாற்றங்கள் என்னென்ன என்பதை ஆழமாகப் பார்ப்போம்.

யூடியூப் மானிடைசேஷன் என்றால் என்ன?

நீங்கள் பதிவேற்றும் காணொளிகளில் விளம்பரங்களை ஒளிபரப்பி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கினை யூடியூப் உங்களுக்கு வழங்கும். இதுவே 'யூடியூப் பார்ட்னர் புரோகிராம்' எனப்படுகிறது.

எப்படி ஆரம்பிப்பது?

உங்களிடம் ஒரு செல்போன், மொபைல் நம்பர், இமெயில் இருந்தால் போதும், யூடியூப் சேனலைத் தொடங்கி ஜொலிக்கலாம். ஆனால், அது மற்றவர்களுக்கு ஏதேனும் கற்றுத்தருவதாகவோ அல்லது உங்கள் தனித்திறமையை வெளிக் கொணர்வதாகவோ இருக்க வேண்டும்.

உங்கள் யூடியூப் பக்கத்துடன் சரியான வங்கி கணக்கை இணைக்க கூகிள் ஆட்சென்ஸ் கணக்கு கட்டாயம் தேவை.

வருமானம் பெறத் தேவையான தகுதிகள்:

யூடியூபில் வருவாய் ஈட்ட சில அடிப்படை விதிமுறைகள் உள்ளன. கடந்த 12 மாதங்களில் 1,000 சந்தாதாரர்களைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 4,000 மணி நேரம் வீடியோ பார்க்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது, 90 நாட்களில் 10 மில்லியன் ஷார்ட்ஸ் பார்வைகளை பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 500 சந்தாதாரர்கள் மற்றும் 3 வீடியோக்களை பதிவேற்றி இருக்க வேண்டும். இதன் மூலம் சூப்பர் சாட், மெம்பர்ஷிப் போன்ற வசதிகளைப் பெறலாம்.

எதற்கெல்லாம் பணம் கிடைக்காது?

ஜூலை 15, 2025 முதல் யூடியூப் ஒரு புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோக்கள், பின்னணி குரல் இல்லாமல் வெறும் 'டெக்ஸ்ட் டு ஸ்பீச்' மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள், சொந்த குரல் அல்லது முகம் காட்டாத ரியாக்ஷன் வீடியோக்கள், காப்புரிமை மீறப்பட்ட இசை மற்றும் காட்சிகள் உள்ள வீடியோக்களுக்கு வருமானம் கிடைக்காது.

வருமானத்தை அதிகரிக்க 'ஹைப்ரிட் ஸ்ட்ரேட்டஜி'

ஒரு நிலையான வருமானத்தை உறுதி செய்ய வேண்டுமென்றால் நீளமான வீடியோக்கள் மிக அவசியம். வாரத்திற்கு இரண்டு நீளமான வீடியோக்கள், அதாவது 7-10 நிமிடம் ஓடக்கூடிய வீடியோக்கள் மற்றும் மூன்று குறுகிய வீடியோக்கள் பதிவிடுவது உங்கள் சேனலுக்கு வலு சேர்க்கும்.

கூடுதல் வருமானம் ஈட்டும் வழிகள்:

கூடுதலாக வருமானம் ஈட்ட அஃபிலியேட் மார்க்கெட்டிங் செய்யலாம். நீங்கள் உபயோகிக்கும் பொருட்களைப் பற்றி வீடியோவில் பேசி, அந்த பொருட்களின் லிங்க்-ஐ வழங்கினால், அதன் மூலம் நிகழும் விற்பனையில் 2% முதல் 10% வரை கமிஷனாகப் பெறலாம். அது மட்டுமின்றி, உங்கள் யூடியூப் சேனலிலேயே யூடியூப் ஸ்டோர் எனும் டிஜிட்டல் கடைகளை உருவாக்கி விதவிதமான பொருட்களை விற்பனை செய்யலாம்.

வீடியோ பதிவேற்றும் முன் சரிபார்க்க வேண்டிய 7 விஷயங்கள் :

1. உங்களுடைய உண்மையான குரலும் முகமும் அதில் இருக்கிறதா?

2. பயன்படுத்திய இசைக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளதா?

3. செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகமாக இருக்கிறதா?

4. வீடியோவின் தலைப்பும், படமும் உண்மைத் தன்மை உடையதா?

5. இது குழந்தைகளுக்கான வீடியோவா என்பதைச் சரியாகக் குறிப்பிட்டுள்ளீர்களா?

6. விளம்பரத்திற்காக பணம் பெறப்பட்டதா?

7. தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளதா?

என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

யூடியூப் என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல, உங்களின் கடின உழைப்பும், தீர்க்கமான திட்டமிடலும் இருந்தால், பணம் ஈட்டித் தரும் ஒரு அற்புதமான தொழிலாகும்.

ஆகவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள உத்திகளைப் பின்பற்றி நீங்களும் ஒரு வெற்றிகரமான யூடியூப்பராக ஜொலிக்கலாம்.

Hindusthan Samachar / JANAKI RAM