Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜனவரி (ஹி.ச.)
மனிதர்களைப் பிரதிபலிக்கும் வகையில், ரோபோக்களும் மின்னல் வேகத்தில் வலி மற்றும் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படும் வகையில் அதிநவீன செயற்கைத் தோலை உருவாக்கி ஹாங்காங் நகர பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
நியூரோ மார்பிக் ஈ-ஸ்கின் எனும் இந்தத் தோல் மூலம் ரோபோக்கள் ஆபத்தை உணர்ந்து, தங்களைக் காத்துக்கொள்ளும் வல்லமையைப் பெறுகின்றன.
மின்னணு தோல் தொழில்நுட்பம் உலக அரங்கில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனிதர்களைப் போலவே உணர்வுகளைத் துல்லியமாக உணரக்கூடிய இந்தத் தொழில்நுட்பம் ரோபோக்களின் எதிர்காலத்தையே புரட்டிப் போடவுள்ளது.
மின்னணு தோல் (ஈ-ஸ்கின்) என்றால் என்ன?
இது மெல்லியதும், வளைந்து கொடுக்கும் தன்மையுடையதுமான ஒரு படலம். இதில் எண்ணற்ற நுட்பமான உணர் கருவிகள் (சென்சார்கள்) பொருத்தப்பட்டிருக்கும். மனித உடலில் நரம்புகள் எவ்வாறு மூளைக்குத் தகவல்களை அனுப்புகின்றனவோ, அதே போன்று இந்த சென்சார்கள் தொடுதல், அழுத்தம், வெப்பம் போன்றவற்றை ரோபோவின் கணினிக்குத் துல்லியமாக அனுப்புகின்றன.
ஒரு ரோபோவானது முட்டையை உடையாமல் கையாள்வதற்கும், அதே நேரத்தில் பாரமான இரும்புத் தூணைத் தூக்குவதற்கும் எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை இந்த உணர்வே தீர்மானிக்கிறது.
அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்கள், திசுக்களின் மென்மை மற்றும் அழுத்தத்தை மிகத் துல்லியமாக உணர இந்தத் தொழில்நுட்பம் பெரிதும் உதவும்.
வயதானவர்கள் அல்லது நோயாளிகளைப் பராமரிக்கும் ரோபோக்கள், மனிதர்களைக் காயப்படுத்தாமல் மென்மையாகக் கவனித்துக்கொள்ள இந்தத் தொழில்நுட்பம் இன்றியமையாதது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் தொடு உணர்வு என்பது வெறும் தொடுதலை மட்டும் உணர்வதோடு நின்றுவிடாமல், அது என்ன பொருள் என்பதைப் புரிந்துகொள்ள ஏஐ பயன்படுத்தப்படுகிறது.
உதாரணமாக, ரோபோ ஒன்று கண்களை மூடிக்கொண்டு ஒரு பொருளை தொட்டாலும், அதன் மென்மை மற்றும் வடிவத்தை வைத்து அது ஆப்பிள் அல்லது டென்னிஸ் பந்து என்பதைக் கண்டறியும் திறன் தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளனர்.
சில ஆராய்ச்சிகளில், மனித நரம்புகளை விட அதிவேகமாக செயல்படும் செயற்கை நரம்பு மண்டலங்கள் உருவாக்கப்பட்டுகின்றன.
இந்தத் தொழில்நுட்பம் முழுமையடையும்போது, ரோபோக்கள் வெறும் இயந்திரங்களாக இல்லாமல், மனிதர்களுக்கு நெருக்கமான, பாதுகாப்பான நண்பர்களாகவும், உதவியாளர்களாகவும் மாறும்.
Hindusthan Samachar / JANAKI RAM