Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 22 ஜனவரி (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் எலைட் அரசு மாதிரி பள்ளியில் பயின்று வந்த பதினொன்றாம் வகுப்பு மாணவன் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகிரி பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவன், எலைட் அரசு மாதிரி பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தான்.
பள்ளியின் விடுதியில் தங்கி கல்வி கற்று வந்த அவன், இன்று வழக்கம்போல் காலை பள்ளிக்கு சென்றுள்ளான். வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், இடைவேளையின் போது அவன் திடீரென விடுதி அறைக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
விடுதி அறைக்குள் சென்ற சஞ்சய், அங்கு இருந்த பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட நேரம் அவன் திரும்பி வராததால் சந்தேகம் எதுவும் எழாத நிலையில், சிறிது நேரம் கழித்து மற்றொரு மாணவன் புத்தகம் எடுக்க விடுதிக்கு சென்றபோது, அறைக்குள் சஞ்சய் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக பள்ளி நிர்வாகத்துக்கும், விடுதி பொறுப்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மாணவனை மீட்க முயன்றபோதும், அவன் ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் பள்ளி வளாகம் முழுவதும் சோகமும் பதற்றமும் நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை காவல்துறையினர், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவன் மனஅழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்தாரா, கல்வி தொடர்பான பிரச்சனைகள் இருந்ததா, அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து தங்கள் மகனை இழந்த துயரில் கதறி அழுத காட்சி அனைவரையும் உருக்கியது. சக மாணவர்களும் இந்த துயர சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மாணவர்களின் மனநலத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் உரிய ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த துயர சம்பவம் கல்வி நிலையங்களில் மாணவர்களின் மனநலப் பாதுகாப்பு குறித்த விவாதத்தையும் மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN