Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 22 ஜனவரி (ஹி.ச.)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் படை, 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோதுகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து தன் வசமாக்கியது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையேயான முதலாவது டி20 ஆட்டம் நேற்று நாக்பூரில் அரங்கேறியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
இதனை தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்களை குவித்தது. இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா 84 ரன்கள் விளாசி அணியை முன்னிலைப்படுத்தினார். அவருக்கு பக்கபலமாக ரிங்கு சிங் 44 ரன்கள் எடுத்தார்.
பிறகு, 239 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டெவன் கான்வே ரன் ஏதும் எடுக்காமலும், ராபின்சன் 21 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அடுத்து வந்த ரவீந்திரா ஒரு ரன்னில் நடையை கட்டினார். பின்பு களம் இறங்கிய பிலிப்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், அவர் 40 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மார்க் 39 ரன்களில் அவுட் ஆனார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் விளைவாக, இந்திய அணி நியூசிலாந்தை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான வருண் சக்ரவர்த்தி மற்றும் ஷிவம் துபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இந்த அபார வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நாளை ராய்ப்பூரில் நடைபெற இருக்கிறது.
Hindusthan Samachar / JANAKI RAM