Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 22 ஜனவரி (ஹி.ச.)
மகாராஷ்டிராவில் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் அவர்களின் தலைமையில் பா.ஜ.க - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் நடைபெற்று வருகிறது.
இங்கு, அரசு ஊழியர்கள் தவிர்த்து இதர பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் சுமார் 2.25 கோடி பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பலன் அடைந்து வருகின்றனர்.
இதற்காக ஒவ்வொரு மாதமும் ரூ.3,700 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய, பயனாளர்களின் விவரங்களை சரிபார்க்கும் கே.ஒய்.சி எனப்படும் செயல்முறையை மாநில அரசு தொடங்கியது.
இதற்காக விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மீண்டும் பெறப்பட்டு கவனமாக சரிபார்க்கப்பட்டன. அதில், சுமார் 24 லட்சம் பெண்கள் அரசாங்க வேலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அவர்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை உடனடியாக நிறுத்தப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 9 லட்சம் நபர்கள் மட்டுமே அரசு ஊழியர்களாக உள்ளனர். இருப்பினும், 24 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் நீக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கே.ஒய்.சி படிவங்களை மறு ஆய்வு செய்ததில், கேள்வியில் இருந்த தெளிவின்மை மற்றும் முறையான பதில் அளிக்கப்படாததே இதற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது.
அந்த படிவத்தில் மராத்தி மொழியில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியில், 'உங்களுடைய குடும்பத்தில் யாரும் அரசு வேலையில் இல்லையா?' என்று கேட்கப்பட்டிருந்தது.
குடும்பத்தில் அரசு பணியாளர் இல்லாதவர்கள் இதற்கு 'இல்லை' என்று பதில் அளித்திருக்க வேண்டும். கேள்வி தெளிவாக புரியாததால், பெரும்பாலானோர் 'ஆம்' என்று பதில் அளித்துவிட்டனர். இதன் விளைவாக, 24 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து நீக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட தகவல்களை நேரடியாக சென்று ஆய்வு செய்ய அங்கன்வாடி ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
Hindusthan Samachar / JANAKI RAM