Enter your Email Address to subscribe to our newsletters

பலோடாபஜார், 22 ஜனவரி (ஹி.ச.)
சத்தீஸ்கரின் பலோடாபஜார் மாவட்டம் பக்குலாஹி கிராமத்தில் அமைந்துள்ள ரியல் இஸ்பாட் ஸ்பாஞ்ச் இரும்புத்தொழிற்சாலையின் நிலக்கரி உலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இன்று (ஜனவரி 22) காலை 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மேலும் பலர் கடுமையான தீக்காயங்களுடன் பிலாஸ்பூருக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடக்கக்கட்ட காவல்துறை அறிக்கைகளின்படி, தொழிலாளர்கள் குழு ஒன்று உலைக்கு அருகில் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது திடீரென இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் அவர்கள் எரிந்துகொண்டிருந்த நிலக்கரியின் கடுமையான வெப்பத்திற்கு ஆளானதாகவும் தெரிகிறது.
வெடிப்பின் காரணமாக எரிந்துகொண்டிருந்த பொருட்கள் சிதறியதால், உயிரிழப்பை ஏற்படுத்தும் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தடயவியல் துறை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்கின. தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டு, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சடலங்களை அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மோதாஸ் அன்சாரி (26), சரஃபத் அன்சாரி (26) மற்றும் சபீர் அன்சாரி (37) ஆகியோருடன், உதவியாளர்களான கல்பு புய்யா (51) மற்றும் ராமு புய்யா (34) இவர்கள் அனைவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பிலாஸ்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
Hindusthan Samachar / vidya.b