Enter your Email Address to subscribe to our newsletters

டாக்கா, 23 ஜனவரி (ஹி.ச.)
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தலைவிரித்து ஆடியதால், ஐ.பி.எல் போட் டியில் முஷ்தபிசுர் ரகுமான் பங்கேற்பதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இந்து அமைப்புகள் பலவும் வங்கதேச வீரருக்கு ஐ.பி.எல் களத்தில் இடமளிக்கக் கூடாது என்று கொந்தளித்தன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிபர் ஷாருக்கானுக்கும் கண்டன முழக்கங்கள் எழுந்தன. இதன் விளைவாக, முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்க பிசிசிஐ நிர்பந்தித்தது.
இதனைத் தொடர்ந்து, வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிப்பதாக கொல்கத்தா அணி நிர்வாகம் அறிவித்தது. எவ்வித நியாயமான காரணமும் இன்றி தங்கள் நாட்டு வீரரை ஐ.பி.எல் அணியிலிருந்து தூக்கியெறிந்ததற்கு வங்கதேசம் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாட இந்தியாவுக்கு வரமாட்டோம் என்று கொடி உயர்த்தியது.
மேலும், தங்கள் நாட்டில் ஐ.பி.எல் ஒளிபரப்புக்கு தடை விதித்தது. அதுமட்டுமின்றி, தங்கள் அணி விளையாடும் ஆட்டங்களை போட்டி நடைபெறும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி) கடிதம் எழுதியது. ஆனால் ஐ.சி.சி இதனை ஏற்க மறுத்துவிட்டது.
இருப்பினும், இலங்கையில்தான் தாங்கள் விளையாடுவோம் என்று வங்கதேசம் 2-வது முறையாக ஐ.சி.சி-யிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. தங்கள் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது.
ஆனால், அட்டவணையில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று ஐ.சி.சி பிடிவாதமாக கூறிவிட்டது. இந்நிலையில், உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க வங்கதேச அணி இந்தியா வருவது குறித்து இறுதி முடிவெடுக்கும்படி வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி கெடு விதித்தது.
இந்த சூழ்நிலையில், ஐ.சி.சி-யின் போர்டு இயக்குனர்கள் காணொளி காட்சி மூலம் இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விவாதித்தனர். இதில் வங்கதேசத்தின் கோரிக்கை முற்றிலும் நிராகரிக்கப்பட்டது. மேலும், வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்து விளையாட மறுத்தால், அதற்கு பதிலாக வேறு அணியை சேர்ப்பதற்கு பெரும்பாலான இயக்குனர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
அதாவது, கூட்டத்தில் பங்கேற்ற 15 இயக்குனர்களில் பாகிஸ்தான் மட்டுமே வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஆதரவு கரம் நீட்டியது.
இதையடுத்து, இந்தியாவில் விளையாட மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
நாங்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட விரும்புகிறோம்.
ஆனால், இந்தியாவில் விளையாட மாட்டோம் ஐசிசியுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்போம்.
முஸ்தாபிசுர் ரகுமான் விவகாரம் ஒரு தனிப்பட்ட பிரச்னை அல்ல.என தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM