Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜனவரி (ஹி.ச.)
ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்திய சந்தையில் களம் இறங்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரிசையில் ரெட்மி நோட் 15 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டு 5ஜி போன்கள் அறிமுகமாகலாம்.
டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவின்படி, ரெட்மி நோட் 15 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டு 5ஜி போன்களும் ஜனவரி 29 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி தொடரில் என்னென்ன சிறப்பம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்?
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஹைப்பர்ஓஎஸ் 2 உடன் உலக சந்தையில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன்கள், அதே திரை, அதே பேட்டரி மற்றும் அதே சிப்செட்களுடன் இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்புள்ளது.
ரேம் மற்றும் சேமிப்புத் திறன் விவரங்கள்: முன்னதாக எக்ஸ் தளம் வாயிலாக டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ், ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ இந்திய மாடல்களின் ரேம் மற்றும் சேமிப்புத் திறன் குறித்த விவரங்களை கசிய விட்டதும் இங்கே நினைவுகூரத்தக்கது.
அதன்படி, ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 8GB + 256GB, 12GB + 256GB, மற்றும் 12GB + 512GB எனும் சேமிப்பு விருப்பங்களிலும், ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் 8GB + 128GB மற்றும் 8GB + 256GB எனும் சேமிப்பு விருப்பங்களிலும் வெளிவரலாம். இந்த தகவல் கசிவு, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகம் வெகு விரைவில் நிகழவுள்ளதை உறுதிப்படுத்துகிறது.
இந்தியாவிற்கு வரவிருக்கும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா அமைப்பில் ஒரு புதிய 200 மெகாபிக்சல் முதன்மை கேமரா இடம்பெறலாம் என சொல்லப்படுகிறது. அதே சமயம், ரெட்மி நோட் 15 ப்ரோ மாடலில் 108 மெகாபிக்சல் சென்சார் இருக்கலாம். இருப்பினும், இந்த இரண்டு போன்களும் சீனாவில் வெளியான அதே சிப்செட் மற்றும் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என நம்பலாம்.
ரெட்மி நோட் 15 ப்ரோ மாடல் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட் மூலம் இயக்கப்படலாம். மேலும், ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம்.
திரையைப் பொறுத்தவரை, இரண்டுமே 6.83-இன்ச் 1.5கே (1280×2772 பிக்சல்ஸ்) மைக்ரோ-கர்வ்டு டிஸ்பிளேக்களை கொண்டிருக்கலாம். மேலும், இரண்டுமே 16ஜிபி வரை LPDDR4x ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS2.2 உள் சேமிப்பகத்தை வழங்கலாம். அதோடு, இந்த இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுமே 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரிகளை கொண்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. சார்ஜிங் வேகத்தில் சில மாறுதல்கள் இருக்கலாம். ப்ரோ பிளஸ் மாடலில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கையும், ப்ரோ மாடலில் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் எதிர்பார்க்கலாம்.
ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி சீரிஸின் இந்திய விலை எப்படி அமையலாம்?
ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் அடிப்படை சேமிப்பு மாடல் ரூ.25,000 - ரூ.28,000 என்கிற விலையிலும், ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போனின் அடிப்படை சேமிப்பு மாடல் ரூ.25,000 க்குள் என்கிற விலையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என யூகிக்கப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM