Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 ஜனவரி (ஹி.ச.)
தலைநகர் டெல்லியில் உறைபனி கொட்டும் வேளையில், அரசு மருத்துவமனைகளின் அருகே இருக்கும் சமுதாய கூடங்கள், இரவு நேர இளைப்பாறும் கூடங்களாக உருமாற்றம் பெற்றுள்ளன.
இது தொடர்பாக, புது டெல்லி மாநகராட்சி மன்றத்தின் துணைத் தலைவர் குல்ஜீத் சிங் சஹால் வெளியிட்ட அறிக்கையில்:
தலைநகர் டெல்லியில் வாட்டி வதைக்கும் குளிர் நிலவுகிறது. அரசு மருத்துவமனைகளில் தங்கி உடல் நலம் தேறி வரும் நோயாளிகளின் உறவினர்கள், ஆஸ்பத்திரி வளாகத்திலேயே கடும் குளிரில் பரிதவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், டெல்லி உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, டெல்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்துடன் ஒன்றிணைந்து, அரசு ஆஸ்பத்திரிகளின் அருகில் உள்ள சமுதாய கூடங்கள் இரவு நேர தங்கும் இடங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை இந்த சமுதாய கூடங்கள் இரவு நேர தங்குமிடங்களாக இயங்கும்.
எய்ம்ஸ், டாக்டர் ராம் மனோகர் லோஹியா, லேடி ஹார்டிங் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், அருகிலுள்ள சமுதாய கூடங்களில் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் தங்கிக்கொள்ளலாம். தங்குபவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த கூடங்களை நாள்தோறும் கவனித்து தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இடம், குடிநீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை புதுடெல்லி மாநகராட்சி மன்றமும், படுக்கைகள் மற்றும் அத்தியாவசியமான சாமான்களை டெல்லி நகர்ப்புற வளர்ச்சி கழகமும் வழங்குகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM