Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜனவரி (ஹி.ச.)
2026-ம் ஆண்டில் வாகன உரிமையை மாற்றுவது (ஆர்சி) டிஜிட்டல்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், சில புதிய விதிமுறைகள் உங்களை சிக்கலில் தள்ளவும் வாய்ப்புள்ளது.
வாகனத்தின் உரிமையை மாற்றுவது என்பது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு சட்டப்பூர்வப் பாதுகாப்பு. ஒரு வேளை விபத்து நேரிட்டால், வாகனத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் ஆர் சி இல்லை என்றால், பழைய உரிமையாளரே சட்ட சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
எனவே, இது தொடர்பாக 2026-ன் புதிய நடைமுறைகள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
ஆன்லைன் மூலம் ஆர்சி மாற்றுவது எப்படி?
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் 'வாகன்' போர்ட்டலை இப்போது முழுமையாக மேம்படுத்தியுள்ளது.
- ஆர்சியை மாற்ற நீங்கள் முதலில் அதிகாரப்பூர்வ parivahan.gov.in தளத்திற்குச் செல்லுங்கள்.
- அங்கு 'Vehicle Related Services' என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மாநிலம் மற்றும் வாகன எண்ணை உள்ளிடவும்.
- வாகனத்தின் சேஸிஸ் எண்ணின் கடைசி 5 இலக்கங்களை உள்ளிட்டதும், உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP மூலம் லாகின் செய்யவும்.
- 'Transfer of Ownership' ஆப்ஷனைத் தேர்வு செய்து, வாங்குபவரின் விவரங்களைப் பதிவிடவும்.
- தேவையான கட்டணத்தைச் செலுத்தவும்.
பாஸ்டேக் செக்:
இதுதான் 2026-ல் கொண்டுவரப்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றம்.
நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, உங்கள் வாகனம் தேசிய நெடுஞ்சாலைகளில் சென்றபோது செலுத்த வேண்டிய டோல் கட்டணங்கள் ஏதும் பாக்கி இருக்கிறதா என்பதை சிஸ்டம் தானாகவே சரிபார்க்கும்.
ஒருவேளை உங்கள் பாஸ்டேக் கணக்கில் பணம் கழிக்கப்படாமல் நிலுவையில் இருந்தாலோ அல்லது அபராதம் இருந்தாலோ, அதைச் செலுத்தும் வரை உங்கள் ஆர்சி மாற்று விண்ணப்பம் அடுத்த கட்டத்திற்கு நகராது. 'கிளியரன்ஸ்' இருந்தால் மட்டுமே உங்களால் ஆர்சி மாற்றத்தை செய்ய முடியும்.
தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்:
வாகனத்தை விற்பவர் மற்றும் வாங்குபவர் பின்வரும் ஆவணங்களைச் சரியாக வைத்திருக்க வேண்டும்:
படிவம் 29 மற்றும் 30 - வாகன விற்பனைக்கான முக்கிய விண்ணப்பங்கள்.
அசல் ஆர்சி கார்டு - வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்.
காப்பீடு - நடப்பில் உள்ள இன்சூரன்ஸ் நகல்.
புகைச்சான்றிதழ் - மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ்.
ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு - வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவருடையதும்.
சேஸிஸ் பென்சில் பிரிண்ட் - வாகனத்தின் சேஸிஸ் எண்ணை ஒரு காகிதத்தில் பென்சிலால் தேய்த்து எடுத்த அச்சு.
இறப்பு அல்லது ஏல வாகனங்களுக்கு என்ன விதி?
உரிமையாளர் இறந்துவிட்டால் வாரிசுதாரர்கள் 'படிவம் 31' மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் மிக அவசியம். இதற்கு 90 நாட்கள் வரை கால அவகாசம் உண்டு.
அரசு அல்லது வங்கி ஏலத்தில் எடுத்த வாகனங்களுக்கு 'படிவம் 32' பயன்படுத்தப்பட வேண்டும். ஏலம் எடுத்ததற்கான அதிகாரப்பூர்வ கடிதம் இணைக்கப்பட வேண்டும்.
காலக்கெடுவும் அபராதமும் :
வாகனத்தை வாங்கிய பிறகு குறிப்பிட்ட காலத்திற்குள் பெயர் மாற்றம் செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படும்.
ஒரே மாநிலத்திற்குள் 14 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வெளிமாநில வாகனம் 45 நாட்களுக்குள் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். இதற்கு பழைய மாநில ஆர்டிஓ-விடம் இருந்து என்ஓசி வாங்குவது கட்டாயம். 2026-ல் 'ஃபேஸ்லெஸ்' சேவைகள் வந்துவிட்டதால், நீங்கள் அலுவலகத்திற்கு அலையத் தேவையில்லை.
ஆனால், உங்கள் ஆதார் கார்டில் மொபைல் எண் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும், போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் ஏதும் நிலுவையில் இல்லையென்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
Hindusthan Samachar / JANAKI RAM