Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 25 ஜனவரி (ஹி.ச.)
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 77-வது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
200 ஆண்டுகால பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து மகாத்மா காந்தி தலைமையில் அகிம்சை வழியில் போராடி, 1947 இல் விடுதலை பெற்று 1950 ஜனவரி 26 அன்று இந்தியா குடியரசு நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. அரசமைப்புச் சட்டமும் நடைமுறைக்கு வந்தது.
நமது நாட்டை இந்தியக் குடியரசாக அறிவித்தவர்கள் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியதன் மூலம், அனைத்து ஜாதி, மதம், மொழி, இனம் கொண்ட மக்கள் அனைவருக்கும் சமஉரிமையும், சம வாய்ப்பும் வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், அதை முற்றிலும் சிதைக்கிற வகையில் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயத்தோடு வாக்கு வங்கியை விரிவுபடுத்துகிற வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. பா.ஜ.க.வின் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்துவதற்காக தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார்.
மக்களவை எதிர்கட்சித் தலைவராக மக்களின் குரலை ஒலித்து வருகிறார். இதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க.வினர் அவர்மீது பொய் வழக்குகளை போட்டு வருகிறார்கள். இத்தகைய பா.ஜ.க.வின் பாசிச, சர்வாதிகார நடவடிக்கையை முறியடிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது.
நமது அரசமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை பாதுகாத்து மத, சமூக, நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்கிற வகையில், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளுவதன் மூலமே இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க முடியும். அத்தகைய சூழல் உருவாக குடியரசு நாளில் உறுதியேற்றுக் கொள்வோம்.
அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 77-வது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ