Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 26 ஜனவரி (ஹி.ச.)
இலங்கையின் கடற்பரப்பில் நடுக்கடலில் நடைபெற்ற ஆழ்கடல் சோதனையின் போது, மிகப்பெரிய அளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு தெற்கே அமைந்துள்ள கடல் பகுதியில், இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று அதிகாலை நடைபெற்ற இந்த சோதனையின் போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற இரண்டு ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை கடற்படையினர் வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த படகுகளில் மீன்பிடி உபகரணங்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
சோதனையில் மொத்தமாக 184 கிலோ ஹெராயின் மற்றும் 112 கிலோ ஐஸ் எனப்படும் செயற்கை போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப்பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 3000 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய மிகப்பெரிய அளவிலான போதைப்பொருட்கள் ஒரே நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டிருப்பது இலங்கை கடற்படை வரலாற்றிலேயே முக்கியமான சம்பவமாக கருதப்படுகிறது. இது சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த கடத்தல் முயற்சியில் தொடர்புடையதாக இரண்டு படகுகளிலும் இருந்த 11 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் இலங்கையின் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்த போதைப்பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தன, இதன் பின்னணியில் செயல்படும் சர்வதேச கடத்தல் வலையமைப்பு என்ன என்பதுபோன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இலங்கை கடற்பரப்பை பயன்படுத்தி போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் கண்காணிப்பை அதிகரித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடி படகுகளை பயன்படுத்தி நடைபெறும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாகவே இந்த ஆழ்கடல் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வளவு பெரிய அளவில் ஹெராயின் மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்கள் பிடிபட்டிருப்பது, பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைப்புகளிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய போதைப்பொருட்கள் சமூகத்தில் பரவினால் இளைஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த சம்பவம் குறித்து இலங்கை அரசு உயர்மட்டத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடலோரம் மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும், இதுபோன்ற கடத்தல் முயற்சிகள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் கடற்படை உறுதியளித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN