Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 ஜனவரி (ஹி.ச)
புதுடெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் குடியரசு நாள் விழா இன்று மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஆனால், அவர்கள் இருவருக்கும் மூன்றாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலிரண்டு வரிசையில் மத்திய அமைச்சர்களும் அவர்களின் குடும்பத்தினரும் அமர்ந்துள்ளனர்.
ஏற்கெனவே, கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, அந்த ஆண்டின் சுதந்திர நாள் விழாவில் கலந்துகொண்டார்.
அப்போதும், அவருக்கு கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மத்தியில் ராகுல் காந்தி அமரவைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பிரதமருக்கு அடுத்த பொறுப்பில் இருக்கும் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்களுக்கு நிகரான மரியாதைகூட வழங்கப்படவில்லை என்று கண்டனம் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு செங்கோட்டையில் நடைபெற்ற குடியரசு நாள் மற்றும் சுதந்திர நாள் விழாக்களில் கலந்துகொள்ளாமல், காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற விழாக்களில் மட்டும் ராகுல் காந்தி பங்கேற்றார்.
இந்த நிலையில், செங்கோட்டை குடியரசு நாள் நிகழ்வில் இன்று கலந்துகொண்டிருக்கும் கார்கே மற்றும் ராகுலுக்கு மீண்டும் பின்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b