Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 27 ஜனவரி (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம், தோமையார்புரத்தில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டம், தோமையார்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவமக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில் அக்கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
இராதாபுரம் அடுத்துள்ள தோமையார்புரம் கடற்கரை கிராமத்தில் ஏறத்தாழ 160க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதி மீனவச் சொந்தங்கள் நாட்டுப் படகின் மூலம் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தோமையார்புரத்தில் முறையான தூண்டில் வளைவு இல்லாத காரணத்தால் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் மீனவர்களின் மீன்பிடி படகுகள், வலைகள், மீன்பிடி உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகியவை கடலுக்குள் இழுத்துச் செல்லப்படும் அவலநிலை ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி, கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு சுவர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவுகள் காரணமாக தோமையார்புரத்தில் கடல் அரிப்பு அதிகமாகிறது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
தோமையார்புரத்தில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்திக் கடந்த 10 ஆண்டுகளாக மீனவச்சொந்தங்கள் மீண்டும், மீண்டும் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு தொடர்ப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாகப் போராடி வரும் தோமையார்புரம் மக்களை அழைத்துப்பேசி அவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்க ஆளும் திமுக அரசு முன்வராதது, மீனவ மக்கள் மீதான அதன் அக்கறையின்மையையே காட்டுகிறது. மீனவ மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்றுவதில் திமுக அரசிற்கு இத்தனை அலட்சியம் ஏன்? இதுதான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்யும் திராவிட மாடலா? எளிய மக்களை ஏமாற்றுவதுதான் திமுக அரசு கட்டிக்காக்கும் சமூகநீதியா? மாண்புமிகு தமிழ்நாட்டின் சபாநாயகர் ஐயா அப்பாவு அவர்களின் சொந்த தொகுதியான இராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த மீனவ மக்களையே வாழ்வாதாரக் கோரிக்கைக்காக இத்தனை ஆண்டுகள் அலைக்கழிப்பது பேரவலம்!
ஆகவே, திருநெல்வேலி மாவட்டம், தோமையார்புரம் மீனவச்சொந்தங்களின் பத்தாண்டுகாலக் கோரிக்கையான தூண்டில் வளைவு அமைத்துத்தர வேண்டுமென்ற நியாயமான கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam