Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 27 ஜனவரி (ஹி.ச.)
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை வரும் 31ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்க உள்ளார்.
இதனை முன்னிட்டு, கீழடியில் நடைபெற்று வரும் திறந்தவெளி அருங்காட்சியக பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பேசுகையில் கூறியதாவது:
தமிழர்களின் பண்டைய நாகரிகம், கலாச்சாரம் மற்றும் நகர வாழ்வியல் சிறப்புகளை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முயற்சியால் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பொதுமக்கள் வியக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இவ்வருங்காட்சியகத்தின் மூலம், நமது பண்டைய தமிழகத்தின் நகர நாகரிகத்தை நேரடியாக அறிந்து கொள்ள முடியும் என்றும் கூறினார்.
மேலும், நான்கரை ஏக்கர் நிலம் ரூ.6 கோடி செலவில் பெற்றுக் கொள்ளப்பட்டு, ரூ.22 கோடி மதிப்பீட்டில் இந்த திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விளக்கினார்.
இந்தியாவிலேயே திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழகம் மட்டுமே என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இதுவரை கீழடியில் நடைபெற்ற 10 கட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த அதிக சான்றுகள் கிடைத்த சில குழிகள் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பிற அகழ்வாய்வு செய்யப்பட்ட குழிகள் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam