Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 27 ஜனவரி (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த கதிர் ஜாய்சன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையில் 1,429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவதற்கான எழுத்துதேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி நடந்தது.
இந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. தேர்வு மையங்களில் வெளிப்படையாகவே செல்போன் பயன்படுத்தவும். காப்பியடிக்கவும் அனுமதியளிக்கப்பட்டு விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டன.
இவையெல்லாம் தேர்வு மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.எனவே, நேர்மையாக நடை பெறாத இந்த தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது. தேர்வில் நடந்த முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தாமல் பணி நியமனம் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், விசாரணை நிறைவடையாமல் ,
உடனடியாக எந்த பணி நியமன ஆணையும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 1,429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணி நியமனங்களை வழங்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் தேர்வில் நடைபெற்ற முறைகேடு புகார் குறித்து , தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை மறுநாள் ஒத்தி வைத்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam