Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 27 ஜனவரி (ஹி.ச.)
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு கர்நாடகா மாநிலத்தில் இருந்து பாயும் காவிரி ஆறு மூலம் நீர் கிடைக்கிறது.
குறிப்பாக அம்மாநிலத்தின் கூர்க் மாவட்டத்தில் உள்ள தலகாவிரி என்ற இடத்தில் உருவாகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 1,341 மீட்டர் உயரத்தில் இருந்து பாய்கிறது. முதலில் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை, ஹேமாவதி அணை, ஹாரங்கி அணை ஆகியவற்றை நிரப்புகிறது.
பின்னர் பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்குள் நுழைக்கிறது. இங்கு மேட்டூர் அணை, அமராவதி அணை, கல்லணை, பவானிசாகர் அணை ஆகியவற்றை நிரப்பி கடைசியில் வங்கக் கடலில் போய் கலக்கிறது.
தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு வரும் காவிரி நீர் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இதில் சேமித்து வைத்து திறக்கப்படும் நீரானது 12 மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது.
இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை குறைந்ததாலும் நாளை(ஜனவரி 28) மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும் என்பதாலும் மேட்டூர் அணை நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
திறக்கப்படும் நீரின் அளவு நேற்று(ஜனவரி 26) காலை விநாடிக்கு 7,000 கன அடியிலிருந்து விநாடிக்கு 6,000கன அடியாகவும் இன்று(ஜனவரி 27) காலை விநாடிக்கு 5,000 கன அடியாகவும் குறைக்கப்பட்டது.
அணைக்கு வரும் நீரில் அளவு விநாடிக்கு 47 கன அடியிலிருந்து வினாடிக்கு 26 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 93.18 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 56.36 டிஎம்சியாக உள்ளது.
Hindusthan Samachar / vidya.b